விமர்சனம்

ஒரு குப்பைக் கதை – திரைப்பட விமர்சனம்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்

பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று. ஒழுக்கமும் கூட. – திருக்குறள் விளக்கம்

பிறர் மனைவியை விரும்பக்கூடாது என்று திருவள்ளுவர் சொல்லியிருந்தார்.

காலம் மாறிவிட்டது. கணவனைத் தவிர பிற ஆண்களை நோக்கக்கூடாது என்பதை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் காளிரங்கசாமி. இக்கருத்து காப்பாற்றும் என்று நம்பிப் படத்தைத் தயாரித்திருக்கிறார் அஸ்லம்.

நடன இயக்குநர் தினேஷ் கதைநாயகன்.

சென்னை மாநகரில் குப்பை அள்ளும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். இந்த நகரம் நம்மால்தான் சுத்தமாக இருக்கிறது என்கிற பெருமிதத்துடன் வேலை செய்கிறவர்.

அவருக்குத் திருமணம் செய்யப் பெண் தேடினால், இந்தத் தொழில் காரணமாகவே பெண் கிடைப்பதில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் நாயகி மனிஷாவைக் கல்யாணம் செய்கிறார்.

இயற்கை எழில் கொஞ்சும் மலையில் குடியிருந்த மனிஷாவுக்கு சென்னையின் கூவம் ஓரக் குடியிருப்பு குமட்டுகிறது.

சுத்தத்தைத் தேடும் அவர் அசுத்தமாகிறார். அதன்பின் என்னவாகிறது என்பதுதான் படம்.

குப்பை அள்ளும் தொழிலாளி வேடத்துக்குப் பொருத்தமாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார் தினேஷ்.

காவல்துறை அதிகாரியிடமே ஒரு முகவரிக்கு வழி கேட்டுவிட்டு பின்பு அவரிடமே வந்து அங்கு ஒரு கொலை செய்துவிட்டேன் என்று சொல்லும் காட்சி கைதட்டல் பெறுகிறது.

அன்பு, பொறுமை, இயலாமை ஆகிய எல்லாவற்றையும் முகத்திலேயே காட்ட முயன்றிருக்கிறார் தினேஷ்.

நாயகி மனிஷாவுக்கு இந்தப்படம் வாழ்நாள் பெருமை தரும். அப்பாவி கிராமத்துப் பெண், ஆசையுடன் திருமணம், பிடிக்காத சென்னை வாழ்க்கை, சுத்தத்தை எதிர்பார்க்கும் அவருக்கு ஏற்படும் மயக்கம், கடைசியில் இயலாமையில் கதறல் என எல்லா இடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அவருடைய அழகும் அப்பாவித்தனமான முகமும் அவர் செய்யும் தப்பும் சரிதான் என்று எண்ண வைக்கிறது.

யோகிபாபு சிரிக்கவைக்கிறார். சுஜோ மாத்யூஸ் மற்றும் கிரண் ஆர்யன் ஆகிய இருவரும் பணக்காரத் திமிர் பிடித்த இளைஞர்களுக்கான பிரதிநிதிகள் வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது. குப்பைக் கூளங்களையும் சுத்தமான இடங்களையும் அந்தந்த உணர்வுகளுடனே காட்டியிருப்பது சிறப்பு.

ஜோஸ்வாஸ்ரீதரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பாடல்வரிகள் வாழ்க்கை வலிகளைப் பிரதிபலிக்கின்றன.

கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பு திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது.

நாயகி செய்வது தப்பே இல்லை என்று நம்மை எண்ண வைப்பதிலேயே இயக்குநரின் பலம் தெரிகிறது. பின்பு நாயகியோடு சேர்ந்து நாமும் வெட்கித் தலைகுனிகிறோம்.

சுத்தமும் அசுத்தமும் புறத்தில் இல்லை அகத்தில்தான் இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் இது குப்பைக் கதை இல்லை குட் (சிறந்த) கதை.

Related Posts