நடிக்க வரும் தங்கை தாராவுக்கு இனியா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?
ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குநர்களுடன், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில்,
‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டுச் சிரிக்கலாம். இந்தப் படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போகப் போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்கத் தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான்.
படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்தக் காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம் என்று கூறினார்.
மேலும், தமிழை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும் என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார்.











