அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்
நாயகன் விஜய் ஆண்டனி தன் மகளுடன் வசித்து வருகிறார்.மனைவி இறந்துவிட்டதாகச் சொல்கிறார்.அந்த மகளுக்கு மருத்துவச் சிக்கல் வருகிறது.அதைத் தீர்க்கவேண்டுமெனில் அம்மா வேண்டும்.இதனால் இறந்துவிட்டதாகச் சொன்ன மனைவியைத் தேடிப்போகிறார் விஜய் ஆண்டனி.இறந்தவரை எப்படித் தேடமுடியும்? என்கிற கேள்வியிலிருந்து சில திடுக்கிடும் விடைகள் கிடைக்கின்றன? அவை என்னென்ன? அவற்றின் முடிவுகள் என்னென்ன? ஆகிய கேள்விகளுக்கான பதில்தான் படம்.
மனைவி இல்லாமல் மகளைப் பாசமாக வளர்க்கும் அப்பா கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான மனநிலையை நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.கதையில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களுக்கேற்பவும் நடிக்க முயன்றிருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா ஈர்க்கிறார்.அவருடைய குறும்புப் பேச்சும் சிறந்த நடிப்பும் படத்துக்குப் பலம்.
நாயகியாக நடித்திருக்கும் பிரித்தி அஸ்ரானி,ஒருதலையாய் விஜய் ஆண்டனியை காதலிக்கிறார்.குழந்தை மீது அதீதபாசம் காட்டுகிறார்.மையக்கதை அவற்றிலிருந்து விலகியிருந்தாலும் தன்னை கவனிக்க வைக்கிறார்.
பகவதி பெருமாள்,முத்துக்குமார்,அருவி மதன்,ஹரிப்பிரியா இசை,ஸ்ரீஜா ரவி,குமார் நடராஜன்,பிரவீனா,லிஸி ஆண்டனி,சித்ரா லட்சுமணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகானந்தம்.ஆர் ஆகிய நடிகர்,நடிகையர் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்கேற்ப இருக்கிறார்கள்.
ஊட்டியில் கதை என்றாலே ஒளிப்பதிவாளர்களுக்கு மகிழ்ச்சிதான்.அழகழகான காட்சிகளைக் கொடுப்பார்கள்.இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன்,காட்சியழகுகளோடு அழுத்தமான உணர்வுகளையும் உணர வைக்கிறார்.
இசை,படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் நாயகன் விஜய் ஆண்டனியே செய்திருக்கிறார்.இரசிக்க வைக்கும் பாடல்கள்,திரைக்கதைக்கேற்ற பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.படத்தொகுப்பும் நேர்த்தியாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் மு.மாறன்.உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக்கதையை எழுதினாராம்.பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதால்,திரைக்கதையும் அந்தக்காலகட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.படத்தில் மிக முக்கியமானதாகச் சொல்லப்பட்டிருக்கும் மருத்துவச் சிக்கலில் இப்போது பல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அவற்றைக் கணக்கில் எடுத்தால் இந்தக் கதை பலவீனமாகிவிடும்.அந்தக் காலகட்டத்திலேயே நடக்கிறது எனும்போது பலமாக இருக்கும்.அதைத்தான் இயக்குநர் கடைபிடித்திருக்கிறார்.
அப்பா மகள் பாசம்தான் மையம் என்று வைத்துக்கொண்டு அதில் திடுக்கிட வைக்கும் திருப்பங்களை வைத்து சுவை கூட்டியிருப்பதோடு அப்பாவாகவும் மகளாகவும் நடிக்க பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததே இயக்குநருக்குப் பெரும்பலமாக அமைந்துவிட்டது.குறிப்பாக மகளாக நடித்திருக்கும் லிதன்யா அனைவரையும் ஈர்த்து படத்தைப் பாதுகாத்திருக்கிறார்.
– இளையவன்












