மணிரத்னம் போல் திறமையானவர் மாறன் – அப்பாகுட்டி இயக்குநருக்கு பாராட்டு
மு.மாறன் எழுதி இயக்கியுள்ள அப்பா குட்டி படத்தில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்),ஹரிப்ரியா இசை,அருவி மதன்,சித்ரா லட்சுமணன்,ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு,பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது. குடும்ப உணர்வுகளுடன் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.அனைத்துத்தரப்பு இரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ள ‘அப்பா குட்டி’ நவம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இத்திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நவம்பர் 9 அன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. ,
இந்தப்படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதியமுயற்சிகளை மேற்கொண்டோம்.என்னுடைய பணியிலும் மூன்று,நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம்.குறிப்பாக,இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம்,வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம்.இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் பேசியதாவது..
இந்தப்படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி.எடிட்டர்,மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார்.ஒரு அழகான,மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.எங்களுக்குள் இருந்த நல்லபுரிதலும்,ஒத்துழைப்பும் பணியை மிகவும் சுவாரஸ்யமாக்கியது.
காஸ்ட்யூம் டிசைனிங் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குள் நல்லபுரிதல் இருந்தது.இந்தக்கதையின் முக்கியமான பகுதி ஊட்டியில் நடைபெறுகிறது.ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதற்கு ஊட்டி போன்ற இடம் பல்வேறு விஷுவல் வாய்ப்புகளை வழங்கக்கூடியது.அந்த இடத்தை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட விஷுவல்களைத் திரையில் பார்க்கும்போது நிச்சயம் இரசிப்பீர்கள்.நன்றி என்றார்.
பாடலாசிரியர் ஏகாதசி பேசியதாவது..,
இயக்குநர் சாருடன் நான் முதன்முதலில் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றினேன்.அந்தப்படத்தில் ஐந்து,ஆறு பாடல்கள் எழுதினேன்.அப்போது நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.நான் எழுதிய ஒரு பாடல் விஜய்ஆண்டனி சாருக்கும் தனஞ்செயன் சாருக்கும் பிடித்துப்போனதால்,அந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப்படத்தின் மூலம் அவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப்படத்தில் அப்பாவைப் பற்றியும்,மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன்.குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன.இந்தப்பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும்,குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
என்னுடைய பாடல்களில் ஏற்கெனவே அம்மாவைப் பற்றிய பாடல் மிகவும் பிரபலமானது.அதேபோல் அப்பாவைப் பற்றிய ஒரு பாடலும் இந்தப்படத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.குறிப்பாக,அப்பாவைப் பற்றிய பாடலை எழுதும்போது என்னுடைய சொந்தவாழ்க்கை அனுபவங்களும் அதில் கலந்திருந்தன.சிறுவயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால்,அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை.அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது.ஆனால்,ஒரு எழுத்தாளராக இந்தப்படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுதமுடிந்தது.
அந்த உணர்வுகளைப் பாடல்வரிகளாக வெளிப்படுத்த வாய்ப்பளித்த விஜய்ஆண்டனி சார் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்றார்.
பாடலாசிரியர் அருண் பாரதி பேசியதாவது..,
என்னை அறிமுகப்படுத்தியவர் விஜய்ஆண்டனி சார்.அதன்பிறகு பல பாடல்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன்.இந்தப்படத்திலும் எனக்கு ஓர் அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார்.குறிப்பாக,அந்தப்பாடலின் வரிகளும் அதன் உணர்வும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல,இந்தப்படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.
ஏகாதசி எழுதியுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழவைத்தது.எனக்கு அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ஆனால்,நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார்.அப்போது அவரைப் பற்றிக் கவிதை ஒன்றை எழுதினேன்.அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப்படத்தின் டிரைலரிலேயே உணரமுடிகிறது.குழந்தை சொல்லும்,‘நீ சாமியைப் பார்த்ததில்லை,ஆனாலும் சாமியை நம்புகிறாய்’ என்ற கருத்தைப் போலவே,பார்க்காமலேயே அன்பையும் உறவையும் உணரமுடியும் என்பதை இந்தப்படம் அழகாகச் சொல்லும் என நம்புகிறேன்.
இயக்குநர் மு.மாறன் சாருக்கு இந்த அழகான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி.விஜய்ஆண்டனி சார் பாடல்வரிகளை மிகவும் அக்கறையுடன் அணுகி,தேவையான திருத்தங்களையும் கவனமாகச் செய்தார்.பாடலைப் பாடிய குஷ்யா,கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் படத்தில் நடித்த சிறுமி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். படம் அனைவரையும் சென்றடையும் என நம்புகிறேன் என்றார்.
நடிகை ஹரிப்ரியா பேசியதாவது….
‘அப்பா குட்டி’ திரைப்படம் என்னுடைய முதல்படம்.என்னை நம்பி இந்தவாய்ப்பை வழங்கிய விஜய்ஆண்டனி சாருக்கும்,அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மு.மாறன் சாருக்கும் மனமார்ந்த நன்றி.அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார்,இயக்குநர் குழு,ஒளிப்பதிவுக்குழு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்,ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி.அனைவரும் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை ஹரிதா பேசியதாவது….
‘அப்பா குட்டி’ படத்தில் நானும் ஒருபகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.விஜய்ஆண்டனி சார் மிகவும் அன்பான மனிதர்.தயாரிப்பாளர்,இசையமைப்பாளர்,படத்தொகுப்பாளர் எனப்பல பொறுப்புகளில் இருக்கும் அவர்,கலைஞர்கள் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது மிகவும் சிறப்பானது.அந்த அன்பான அணுகுமுறைக்கு அவருக்கு மனமார்ந்த நன்றி. இயக்குநர் மு.மாறன் சார்,ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார்,கலை இயக்குநர் ராஜா சார் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
என்னுடன் நடித்த சககலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.இந்தப்படத்தில் தந்தையின் அன்பு, குழந்தைப்பருவ உணர்வுகள் எனப் பல ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகப் பேசியிருக்கிறோம்.இந்தப்படத்தை அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரிக்கவேண்டும்.திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து இரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது….
‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இயக்குநர் மு.மாறன் சார் அனைவரின் மனதையும் தொடும்வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருக்கிறார்.விஜய்ஆண்டனி சார் எப்போதுமே வித்தியாசமான கதைகளையும் முயற்சிகளையும் தேர்ந்தெடுப்பவர்.இந்தப்படத்தின் தலைப்பு முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் மேடை அமைப்புவரை அனைத்திலும் அவரது தனித்துவம் தெரிகிறது.படத்தின் இரண்டு பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‘அப்பா குட்டி’ திரைப்படம் நிச்சயம் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடைந்து வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.
நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது….
விஜய்ஆண்டனி சாரின் இசைக்கும்,அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் மிகப்பெரிய இரசிகை.அவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை தேர்வு வித்தியாசமாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு கதையில் எனக்கும் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மு.மாறன் சாருக்கு நன்றி.ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.அம்மாவைப் பற்றிப் பல பாடல்கள் வந்திருக்கின்றன.ஆனால் அப்பாவுக்காகவும் ஒருபாடல் இருக்கவேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன்.இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழவைத்தது.நானும் இந்தப்படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தரவேண்டும்.நன்றி என்றார்.
நடிகை ஹரிப்ரியா விஸ்வநாதன் பேசியதாவது….
இயக்குநர் மு.மாறன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம்.இதற்கு முன்பு அவர் இயக்கிய படத்திலும்,இந்தப்படத்திலும் எனக்கு வித்தியாசமான,சவாலான கதாபாத்திரங்களைக் கொடுத்ததற்கு நன்றி.இந்தப்படத்தின் முழுக்கதையையும் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.குறிப்பாக,இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருப்பதால் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.இந்தப்படத்தில் ஒருபகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.
விஜய்ஆண்டனி சார் மிகவும் எளிமையான மனிதர்.அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்.ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் அழகாகத் தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகவும் நட்பாகவும் ஜாலியாகவும் இருந்தார்கள்.அனைவருடனும் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.நவம்பர் 20 ஆம் தேதி படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது….
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மு.மாறன் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார். விஜய்ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார்.படத்தில் அப்பாகுட்டியாக நடித்த சிறுமியும் தனது கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார்.மற்ற நடிகர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.
நான் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டேன்.படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.நன்றி என்றார்.
இயக்குநர் மு.மாறன் பேசியதாவது….
‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம்.இதற்குமுன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன.தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால்,இந்தமுறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.இந்தக்கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது.பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது.அப்போது இந்தக்கதையில் விஜய்ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.
விஜய்ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல்பாதியைச் சொன்னதுமே இந்தப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம்பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார்.நல்லகதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் ஓர் உதாரணம்.‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள்.அப்படிப்பட்ட நல்லகதையுடன் நாங்கள் வருகிறோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி.படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில் சார், தனஞ்செயன் சார்,சசி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள்,சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார்.
இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது….
விஜய் ஆண்டனி சாரைப் பற்றி நிறைய பேசவேண்டும்.அவருடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பழகி வருகிறேன்.கடின உழைப்பாளியான அவர்,கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர்.ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதைச் சரியாகச் செய்து முடிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்.அவரைப் பற்றி இன்னும் நிறைய பேசவேண்டும்.
இந்தப்படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ்சினிமாவில் என் அறிமுகத்தில் எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர்.எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகவும்,எதிர்பார்ப்புகளைத் தாண்டியும் நடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.அவர் இன்னும் பெரிய உயரத்தை அடையவேண்டும் என்று விரும்புகிறேன்.படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும்,நடிகர் தேர்வுப் பொறுப்பைக் கவனித்த என் தம்பி சுகுமார் சண்முகத்துக்கும் வாழ்த்துகள்.அனைவரும் சிறப்பான வளர்ச்சியைப் பெறவேண்டும். நன்றி என்றார்.
நடிகர் ஜென்சன் திவாகர் பேசியதாவது….
‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.இயக்குநர் மு.மாறன் சார் கொடுத்த ஸ்கிரிப்டைப் படிக்கும்போது முதல் 15 பக்கங்களிலேயே கதை என்னை ஈர்த்துவிட்டது.கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை,தொடர்ந்து உணர்வுபூர்வமான அனுபவமாக மாறி,முதல்பாதி முடியும்வரை விறுவிறுப்பைக் குறைக்கவில்லை.ஸ்கிரிப்டில் இருந்த உணர்வுகளைத் திரையில் அப்படியே கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம் படத்தின் நடிகர் தேர்வு.அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் பல திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.குறிப்பாக முருகானந்தம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.நகைச்சுவைக் காட்சிகளில் இருவரும் இணைந்து பணியாற்றியது மிகவும் ஜாலியாக இருந்தது.விஜய்ஆண்டனி சாருடன் எனக்கு நல்ல காம்பினேஷன் காட்சிகள் அமைந்துள்ளன.தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும்,எடிட்டராகவும் அவர் காட்டும் ஈடுபாடு வியக்கவைக்கிறது.படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும், நல்லகாட்சிகளைப் சிறப்பாக செய்யவேண்டும் என்ற அவரது அணுகுமுறையும் பாராட்டுக்குரியது.
இயக்குநர் மு.மாறன் சாருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.அவர் அமைதியாக இருந்தாலும்,தனக்குத் தேவையானதைத் தெளிவாகச் செய்து முடிப்பார்.ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார்,ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.குறிப்பாக ஊட்டியின் குளிருக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து கொடுத்த ஆடை வடிவமைப்புக்குழுவுக்கு நன்றி.
ப்ரீத்தி அஸ்ராணி யூடியூப் மூலம் தமிழைக் கற்றுக்கொண்டு மிக அழகாகப் பேசுகிறார்.தனது வசனங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார்.அவர் இன்னும் பல உயரங்களை அடைவார் என்று நம்புகிறேன்.என்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும்,பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களுக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன்.விஜய்ஆண்டனி சார் தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, தனிப்பட்ட முறையில் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார்.அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப்படத்தைப் பார்த்தோம்.படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.என் மனைவியும் அழுதுவிட்டார்.அந்த அளவுக்கு படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது.விஜய்ஆண்டனி சாரிடம் படத்தைப் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டதாகத் தெரிவித்தேன்.இதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் சார் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார்.அந்தப்படத்தைப் போலவே ஒரு தந்தை மகளுக்காக எவ்வளவு தூரம் செல்லமுடியும் என்பதை இந்தப்படத்தில் விஜய்ஆண்டனி சார் வெளிப்படுத்தியிருக்கிறார்.இந்தப்படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை இரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் மு.மாறன் மிகக்குறுகிய காலத்தில்,ஒரே ஷெட்யூலில் சுமார் 60 நாட்களில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.மிகவும் அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட கதையைச் சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.ப்ரீத்தி அஸ்ராணி இந்தப்படத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் மிகவும் சவாலானது.ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க அவர் முன்வந்ததும்,அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.இந்தப்படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழ்சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் பேபி லிதன்யாவின் நடிப்பு,வசன உச்சரிப்பு மற்றும் விஜய்ஆண்டனியுடன் அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன
இந்தப்படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது,அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர்.இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்தவேண்டாம்,தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர்.படம் முடிந்ததும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு,உடனடியாகப் படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர்.பின்னர் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது. விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு,‘இந்தப்படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று உடனடியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார்.படம் வெளியாகும் முன்பே கிடைத்த இந்த அங்கீகாரம்,அதன் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்.
விஜய்ஆண்டனி சாரின் உழைப்புக்கும்,படத்தின் மீதான நம்பிக்கைக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப்படத்தில் விஜய்ஆண்டனி,ப்ரீத்தி அஸ்ராணி,பேபி லிதன்யா ஆகியோரின் நடிப்பும்,மு.மாறனின் இயக்கமும் நிச்சயம் பேசப்படும்.படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகும்‘அப்பா குட்டி’ படத்தை இரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.இந்தப்படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
நடிகர் முருகானந்தம் பேசியதாவது…..
இயக்குநர் மு.மாறன் இதற்கு முன்பு இயக்கிய படங்களிலிருந்து ‘அப்பா குட்டி’ முற்றிலும் வித்தியாசமான படம்.மணிரத்னம் சார் பல்வேறு ஜானர்களில் படங்களை இயக்குவதுபோல,மாறனிடமும் பல்வேறு கதைக்களங்களில் படம் இயக்கும் திறமை இருக்கிறது. படப்பிடிப்பில் ஒரு நடிகர் தனது குடும்பப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுகூட,அவரிடம் கோபப்படாமல் பொறுமையாகப் பேசிய மாறனின் குணம் என்னை மிகவும் கவர்ந்தது.மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்ற அவரது அணுகுமுறையே அவரை உயரத்துக்குக் கொண்டு செல்லும்.நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்.
விஜய்ஆண்டனி சாருடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி.அவரை ஒரு நதியுடன் ஒப்பிடுவேன்.எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர்.பல்வேறுதுறைகளில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.அவருடன் பணியாற்றும் கலைஞர்களைத் தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பளித்து ஊக்குவிப்பதும் சிறப்பானது.அவரது உழைப்பும் பயணமும் என்றும் தொடரவேண்டும்.அவருக்கு மனமார்ந்த நன்றி.
இந்தப்படத்தில் நடித்த சிறுமி மிகவும் சுறுசுறுப்பாகவும்,அனைவருடனும் அன்பாகவும் பழகினார்.ப்ரீத்தி அஸ்ராணியுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.அவரிடம் சிறந்தநடிகையாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இயக்குநராகவும் உருவாகும் திறமையும் இருக்கிறது.படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலப் பழகினோம்.ஏகாதசி எழுதிய அப்பாவைப் பற்றிய பாடலும்,மற்றொரு பாடலின் வரிகளும் மிகவும் அருமையாக அமைந்துள்ளன.குறிப்பாக அப்பா பாடல் இரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்று நம்புகிறேன். அந்த ஒரு துளி கண்ணீர்தான் இந்தப்படத்திற்கும் பாடலுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.இரு பாடலாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.நன்றி என்றார்.
விநியோகஸ்தர் பிரவீன் லால்வானி பேசியதாவது….
எங்களை வாழவைக்கும் இரசிகர் பெருமக்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பா இல்லாத வாழ்க்கையின் வலியும்,அப்பாவின் அருமையும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும்.அந்த உணர்வை மையமாகக் கொண்ட ‘அப்பா குட்டி’ படத்திற்கு விஜய்ஆண்டனி மிகவும் பொருத்தமான கதாநாயகன்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர்,தனது உழைப்பால் பல்வேறு தடைகளைக் கடந்து இன்று மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்.விளம்பர இசையில் தொடங்கி இசையமைப்பாளர்,நடிகர் எனப் பல உயரங்களை அடைந்துள்ள அவரைப் பாராட்டுகிறேன்.
இந்தப்படம் இரசிகர்களை நிச்சயம் உணர்வுபூர்வமாகப் பாதிக்கும் என்று நம்புகிறேன்.தனஞ்செயன் சார் கூறியதுபோல,படம் பார்த்து உங்கள் கண்களில் கண்ணீர் வந்தால் அதன்பின்னால் இருக்கும் உணர்வை நினைத்துப் பாருங்கள்.‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.நன்றி என்றார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசியதாவது….
‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம்.இயக்குநர் மு.மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத்தெளிவான பார்வையுடன் உருவாக்கியிருந்தார்.இந்தப்படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக,ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன.அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம்.ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை.அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய கதாபாத்திரம் வயதில் இளமையாக இருந்தாலும்,மிகவும் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது.அதை என்னால் சிறப்பாகச் செய்யமுடியுமா என்று இயக்குநரிடம் கேட்டபோது,அவர் எனக்கு நம்பிக்கையளித்தார்.விஜய்ஆண்டனி சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம்.நடிகர்,இசையமைப்பாளர்,படத்தொகுப்பாளர்,தயாரிப்பாளர் எனப்பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும்,மிகவும் எளிமையாகவும் சக நடிகர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தும் பணியாற்றினார்.அவரது கதைத்தேர்வு,தொழில்முறை அணுகுமுறை மற்றும் பணிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.ஊட்டி மற்றும் சென்னையில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிப்பது சவாலானது.ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள்.விநியோகஸ்தர்கள் செந்தில் சார்,பிரவீன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இந்தப்படம் அப்பா – மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது.இதில் வித்தியாசமான கதைக்களம்,வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்தும் கலந்திருக்கின்றன.நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தரவேண்டும்.குறிப்பாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும்.நன்றி என்றார்.
இயக்குநர் ஆனந்த் பேசியதாவது…..
‘அப்பா குட்டி’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தேன்.திரையிடப்பட்ட பத்துநிமிடங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன. விஜய்ஆண்டனி சார் விரும்பும் வகையில் அழகான படமாக உருவாகியிருப்பது தெரிகிறது.இயக்குநர் மு.மாறன்,நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.
விஜய்ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு இரண்டாவது வாய்ப்பு.ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தின்போது அவர் என்னை அழைத்துப் படம் இயக்க வாய்ப்பளித்தார்.அதன்பிறகு ‘கோடீஸ்வரன்’ உள்ளிட்ட படங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம். தற்போது மற்றொரு படத்திற்கான பணிகளிலும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.‘அப்பா குட்டி’ஒரு உணர்வுபூர்வமான கதையாகவும்,இரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கின்ற படமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.விஜய்ஆண்டனி சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி என்றார்.
பேபி லிதன்யா பேசியதாவது….
‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.இந்தப்படத்தில் அனைவருடனும் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.விஜய்ஆண்டனி அங்கிளும்,ப்ரீத்தி அக்காவும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருப்பார்கள்.அதனால் நடிப்பதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எனக்கு வாய்ப்பளித்த விஜய்ஆண்டனி அங்கிள்,இயக்குநர் மாறன் அண்ணா,ப்ரீத்தி அக்கா,ஜென்சன் அண்ணா,ஹரிதா அக்கா, ஹரிப்ரியா அக்கா மற்றும் சுகுமார் அண்ணா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.எல்லோரும் கண்டிப்பாகத் திரையரங்குக்குச் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு கொடுங்கள்.உங்களுக்குப் படம் மிகவும் பிடிக்கும்.நன்றி என்றார்.
இயக்குநர் சசி பேசியதாவது…
ப்ரீத்தி அஸ்ராணி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வேறுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இவ்வளவு அழகாகத் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுவது சாதாரண விஷயமல்ல.அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
‘நூறு சாமிகள்’ படப்பிடிப்பின்போது விஜய்ஆண்டனி சாரிடம் அடுத்தபடம் என்ன என்று கேட்டேன்.அப்போது ‘அப்பா குட்டி’ என்ற தலைப்பைப் பற்றிச் சொன்னார்.அந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே இதைத் தவறவிடாதீர்கள்,மிகவும் அழகான தலைப்பு என்று கூறினேன்.அப்பாவைப் பற்றிய கதைக்கு மிகவும் எளிமையாகவும்,அனைவரது மனதிலும் பதியக்கூடியதாகவும் இந்தத் தலைப்பு அமைந்திருக்கிறது.
ப்ரீத்தி அஸ்ராணி இந்தப்படத்தில் நடிப்பதாகக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.பின்னர் ஜென்சன் திவாகர் இந்தப்படத்தைப் பற்றிப் பலமுறை என்னிடம் பாராட்டிப் பேசினார்.குறிப்பாக,பேபி லிதன்யாவின் நடிப்பையும் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளையும் வெகுவாகப் பாராட்டினார்.தனஞ்செயன் சார்,தமிழ் தெரியாத அமேசான் பிரைம் பிரதிநிதிகளுக்குப் படத்தைத் திரையிட்டபோது,அவர்கள் இடைவேளைகூட வேண்டாம் என்று தொடர்ந்து பார்த்து,இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகக் கூறினார்.மொழி தெரியாதவர்களையும் கதை உணர்வுபூர்வமாகப் பாதித்திருப்பது படத்தின் தரத்தைக் காட்டுகிறது.
ஒரு திரைப்படத்தை உருவாக்கிய பிறகு அதை ஓடிடி நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்வது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவால்.அந்தச்சூழலில் அமேசான் பிரைம் போன்ற முன்னணி தளம் படத்தைப் பார்த்துப் பாராட்டி வாங்கியிருப்பது விஜய்ஆண்டனி மற்றும் மு.மாறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இன்று வெளியிடப்பட்ட டிரைலர்,பாடல்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.இந்தப்படம் பெரிய அளவில் இரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் ஒரு மகனாக விஜய்ஆண்டனி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.அதேபோல் ‘அப்பா குட்டி’ படத்தில் ஒரு அப்பாவாக அனைவரது மனதிலும் இடம்பிடிக்கப் போகிறார்.விஜய்ஆண்டனி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…..
‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.இந்தக்கதையைக் கேட்டபோது முதல்பாதியே மிகவும் பிடித்திருந்தது.இரண்டாம்பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.குறிப்பாக,படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.இந்தப்படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன.‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன்.அதேபோல்,‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது,இந்தப்படத்தின் பாடல்களும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இயக்குநர் மு.மாறன் மிகவும் திறமையானவர்.குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு,வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார்.அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி எந்தக்கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்.தமிழ்மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும்,வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது.பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்கவைக்கிறது.இந்தவயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார்.ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள்,விநியோகஸ்தர் செந்தில்,தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் இரசிகர்களுக்கு நன்றி.இந்தநிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது.அந்தப்படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.












