November 6, 2026
விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 – திரைப்பட விமர்சனம்

2020 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியானது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் 2.

முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் வேறுகதை மற்றும் களத்தைக் கொண்டு வந்திருக்கிறது இந்தப்படம்.

சென்னையில் காவலராகப் பணிபுரியும் நாயகி நயன்தாராவுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கிறது.மயிலாஞ்சி எனும் ஊருக்கு மாற்றலாகிப் போன பின்பு அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.அவர்தான் மூக்குத்தி அம்மன் என்பதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் வந்திருக்கிறார் என்பதும் அவரை அழிக்க ஒருவர் இவ்வளவு காலமும் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் வெளிப்படுகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்கிறது படம்.

சாந்தமான புன்னகையுடன் அமைதியான அம்மனாக வந்திருந்த நயன்தாரா,இந்தப்படத்தில் அமைதி அன்பு மட்டுமின்றி ஆவேசம்,ஆக்ரோசம் என ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.காவலராக இருக்கும்போது நரபலி முயற்சியைத் தடுப்பது,அம்மனாக பெரும்பழியுணர்ச்சியை எதிர்கொள்வது உட்பட எல்லா இடங்களிலும் அந்தந்தக் கதாபாத்திரத்தின் தன்மை சிறிதும் குறையாமல் அதேநேரம்,தன்னுடைய தனித்தன்மையை நிறுவி நிலைக்கிறார் நயன்தாரா.

அம்மனை அழிக்கத்துடிக்கும் சாத்தானாக நடித்திருக்கும் ரெஜினா,தோற்றத்தில் அழகுதேவதையாகவும் நடிப்பில் அரக்கியாகவும் மிளிர்கிறார்.

ரெஜினாவின் இணையராக நடித்திருக்கும் துனியாவிஜய்யும் அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.

நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி,யோகிபாபு ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அபிநயா,ராமச்சந்திரா ராஜூ, சிங்கம் புலி,விச்சு விஸ்வநாத்,மைனா நந்தினி,இனியா,நிதின் சத்யா ஆகியோர் தங்கள் வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

குஷ்புவும் சினேகாவும் சிறப்புத் தோற்றத்தில் வந்து சிலிர்க்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் கோபிஅமர்நாத்,இந்தக்கதையை காட்சிகள் மூலமே வெற்றிகரமாகக் கடத்தவியலும் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.கணினி வரைகலைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப்தமிழாவுக்குள் அம்மன் நுழைந்துவிட்டதோ எனும்படி இறுதிப்பாடல் அமைந்துள்ளது.பின்னணி இசையில் திரைக்கதையின் அதிர்வு குறையாமல் கொண்டுசெல்கிறார்.

.ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

பேய்ப்படங்கள் மட்டும்தான் என்றில்லை சாமி படமும் என்னால் எடுக்கமுடியும் என்று களமிறங்கியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் சுந்தர்.சி.இதுபோன்ற படங்களின் கதைகளில் புதுமையைப் புகுத்தவியலாதெனினும் அதைச் சொல்லும்விதத்தில் புதுமை செய்யமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.அவருடைய தேர்ந்த அனுபவம் இரசிகர்களுக்கு சிறந்த காட்சியனுபவம்.

மகாசக்தி தொடரலாம்.

– நிலவன்

Related Posts