தமிழகத்தில் அதிகாலைக் காட்சிகள் இரத்தானது ஏன்?
தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு தினசரி 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு….
தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர்.
அவற்றில் முக்கியமாக,தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வாரகாலத்துக்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு 6 காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும்’சி’படிவ உரிம நிபந்தனை 14-ஏ-இன்படி,தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும்,இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த்திரைப்படங்கள்,வெளியிடப்படும் நாளிலிருந்து,ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும்,உள்ளூர் பண்டிகை நாட்கள்,பொதுவிடுமுறை நாட்கள்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர்,தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து,தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்தநாள் காலை 02.30 மணிவரை திரையிடவும்,உள்ளூர் பண்டிகை நாட்கள்,பொதுவிடுமுறை நாட்கள்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து,தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழ்நாட்டில் பண்டிகைக்கால வார இறுதிகளில் தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணிக்குத் தொடங்கி,அதிகாலை 2.30 மணிவரை ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2023 ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு திரையரங்கில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து,தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகள் நிறுத்தப்பட்டன.இதன்காரணமாக,கேரளா,கர்நாடகா மற்றும் ஆந்திரா/தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழ்த்திரைப்படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு வந்த நிலையிலும்,தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே திரைப்படங்கள் தொடங்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால்,தமிழ்த் திரைப்படங்களுக்கு மற்ற மாநிலங்களுடனும்,வெளிநாடுகளுடனும் சமமான வெளியீட்டு வாய்ப்பு இல்லாத நிலை உருவானது.குறிப்பாக,வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக்கே திரைப்படங்களைப் பார்த்த இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள்,தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் மீதான தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்த முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்,சமீபத்தில் தமிழ்நாடு அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA),தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருமித்த குரலில்,தமிழ்நாட்டிலும் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
மேலும்,குறிப்பாக பண்டிகைக் கால வார இறுதிகளில்,காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை தேவையான எண்ணிக்கையில் காட்சிகளைத் திரையிட அனுமதிப்பதன் மூலம்,புதிய திரைப்படங்களுக்கு உலகளவில் சமமான வெளியீட்டு வாய்ப்பு (Level Playing Field) கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் பரிசீலித்த மாண்புமிகு தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ஏ.ராஜ்மோகன் அவர்கள்,எங்களது கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று,அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக,தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணி முதல் தொடங்கவும்,அதிகாலை 2.30 மணி வரை திரையிடவும்,பண்டிகைக் கால வார இறுதிகளில் ஆறு காட்சிகள் வரை திரையிடவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவு,பண்டிகைக் காலங்களில் புதிய திரைப்படங்களுக்கு கூடுதலாக ஒரு காட்சியை வழங்குவதோடு,உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ்த்திரைப்படங்கள் ஒரேநேரத்தில் திரையிடப்படுவதற்கும் வழிவகுக்கும்.இதன்மூலம்,தமிழ்த் திரைப்படங்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு முக்கியமான சமநிலையற்ற நிலை சரிசெய்யப்படுகிறது.
தமிழ்த்திரையுலகின் நலனில் அக்கறை கொண்டு,இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்,மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே,2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கி,அந்த 224 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாகவும் மனதளவிலும் மிகப்பெரிய ஆதரவை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து,தற்போது சிறப்புக்காட்சிகளுக்கான இந்த அனுமதியும் வழங்கப்பட்டிருப்பது,தமிழ்த் திரையுலகிற்கு தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான ஆதரவையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாகும்.
தமிழ்த் திரையுலகிற்கு தொடர்ந்து ஆதரவுத் தூணாக இருந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும்,இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து அனுமதியைப் பெற்றுத்தந்த மாண்புமிகு தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ஏ.ராஜ்மோகன் அவர்களுக்கும்,தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
இவ்வாறு அதில் கூற்ப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
நடிகர் அஜித் குமார் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,2023 அன்று வெளியானது.அப்போது நடந்த திரையரங்குக் கொண்டாட்டத்தின் போது ஓர் இளம் இரசிகர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற ரோகினி திரையரங்கம் (Rohini Theatre) அருகே நள்ளிரவு 1 மணி காட்சியைக் காண நூற்றுக்கணக்கான இரசிகர்கள் திரண்டிருந்தனர்.அப்போது கொண்டாட்டத்தின் போது அங்கிருந்த இரசிகர்கள் சிலர் சாலையில் மெதுவாகச் சென்ற ஒரு லாரியின் மீது ஏறி நடனமாடினர்.அதில்,சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் (19) என்ற இளைஞர் நிலைதடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்தார்.கீழே விழுந்ததில் அவரது முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் உயிரிழந்தார்.
அதேநாளில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படமும் வெளியானது.இருதரப்பு இரசிகர்களின் அதிகப்படியான கொண்டாட்டத்தால் ரோகினி திரையரங்கின் கண்ணாடிகள் மற்றும் பேனர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து,சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே,அதற்காக உயிரை விபரீதத்திற்குள்ளாக்கக் கூடாது என்று திரைத்துறையினர் பலரும் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்தனர்.அதைத் தொடர்ந்தே,இனி எல்லாப்படங்களும் காலை 9 மணிக்கு மட்டுமே திரையிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பை மாற்றித்தான் இப்போது இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.











