September 26, 2026
விமர்சனம்

மீசைய முறுக்கு 2 – திரைப்பட விமர்சனம்

மீசைய முறுக்கு முதல்பாகத்தில் ஓர் இளைஞன் போராடி இசைத்துறையில் நுழைந்து வெற்றி பெறுவதைச் சொல்லியிருந்த ஹிப்ஹாப் ஆதி,இரண்டாம் பாகத்தில்,அங்கீகாரத்துக்காகப் போராடும் கானா பாடகர்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

1970 கள்,1990 கள் மற்றும் தற்காலகட்டம் ஆகியனவற்றில்,மற்ற இசைக்கலைஞர்கள் போல் பல்வேறு மேடைகளில் கானா பாடலைப் பாடவேண்டும் என்று விரும்பும் கானா பாடகர்களின் எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

மூன்று தலைமுறை கானாபாடகராகவும் ஹிப்ஹாப்தமிழா ஆதியே நடித்திருக்கிறார்.அந்தந்தக் காலகட்டத்துக்கேற்ற உடைகள்,சிகையலங்காரம் ஆகியன மட்டுமின்றி உடல்மொழியிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.துடிப்பு,வெடிப்பு,உணர்ச்சிகரமான நடிப்பு ஆகியனவற்றைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்.

மூன்று ஹிப்ஹாப் ஆதிகள் இருப்பதால்,சைத்ரா,கீதிகா சர்மா,ரம்யா ரங்கநாதன் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்.ரம்யா ரங்கநாதன் கொஞ்சம் முன்னிலை பெறுகிறார்.

கருணாஸ், ஹர்சத் கான் ஆகியோர் நல்லநடிப்புடன் நகைச்சுவையையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்கிறார்கள்.

நாசர்,ஆடுகளம் நரேன்,சாரா,கருணாகரன் என படத்தில் முக்கியமான நடிகர்கள் இருக்கிறார்கள்.அவர்களுடைய அனுபவ நடிப்புகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் பாலாஜி சுப்பிரமணியத்துக்கு,தன் திறமையை நிறுவ நல்வாய்ப்புள்ள திரைக்கதை அமைந்திருக்கிறது.மூன்று வெவ்வேறு காலகட்டங்கள் என்பது அவருக்கு வைக்கப்பட்ட தேர்வு என்றால் அந்தந்தக் காலகட்டத்துக்கேற்ற ஒளியமைப்புகள் வண்ணங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி தேர்வில் வென்றிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர்,படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்து வேலை செய்திருக்கிறார்.ஆனாலும் அங்கங்கே வேகத்தடைகள் இருக்கத்தான் செய்கின்றன.

எழுதி இயக்கி இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப்தமிழா ஆதி.கதையும் அவருடையது களமும் அவருடையது நடிப்பும் அவருடையது என்பதால் சுதந்திரமாகப் பணியாற்றியிருக்கிறார்.

மூன்று தலைமுறைகளாக கானா பாடல்களின் நிலை,ஒவ்வொரு காலகட்டத்திலும் கானா பாடல்களில் ஏற்படுகிற மாறுபாடுகள் ஆகியனவற்றை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.அதோடு இசை உலகத்தில் நடக்கும் அரசியல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.மற்ற துறைகளைப் போல இசைத்துறையிலும் வாரிசுரிமைக்குக் கிடைக்கும் மதிப்பு மரியாதைகளையும் சாடியிருக்கிறார்.

படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் இடையில் பல தோல்விகளைச் சந்தித்துவிட்டதால் விட்டதைப் பிடித்தாக வேண்டும் என்று தீவிரமாக உழைத்திருக்கிறார்.அதற்கேற்ற பலன் கிடைத்திருக்கிறது.

தீவிரநம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு,தான் ஒரு முக்கியமான விளம்பரதாரர் என்கிற பெயரை இந்தப்படத்திலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

– இளையவன்

Related Posts