மக்கள் தலைவா – திரைப்பட விமர்சனம்
தற்போது தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஒன்றரை மாதங்களுக்குள்ளாக அதைக் கடுமையாக விமர்சிக்கும் படமாக வந்திருக்கிறது மக்கள் தலைவா.
சோம்பேறியாக ஊர் சுற்றிக்கொண்டு,அவ்வப்போது போலி போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தால் வாழ்க்கையை ஓட்டும் நாயகன் ரவிமரியாவை,பெரும் செல்வந்தரான ராதாரவி திரைப்பட நாயகனாக்குகிறார்.பிறகு அவரது தலைமையில் அரசியல்கட்சி தொடங்குகிறார்.ராதாரவி சொல்வதையெல்லாம் அப்படியே செய்யும் ரவி மரியா,குறுகிய காலத்தில் தலைவராக உருவெடுக்கிறார்.அதன்பின் நடக்கும் நிகழ்வுகள்தாம் திரைக்கதை.
கதாநாயகனாக நடித்தாலும் தன் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார் ரவிமரியா.வசனங்களில் குறைவில்லை.அங்கங்கே சிரிக்க வைக்கவும் தவறவில்லை.
ரவிமரியாவை ஆட்டிப்படைக்கும் கதாபாத்திரத்திற்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார் ராதாரவி.அவருடைய பாத்திரப்படைப்பு நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.
நிஜத்தில் அரசியல்வாதிகளாகத் தோற்றுப்போன பழ.கருப்பையா,நாஞ்சில்சம்பத் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.
கஞ்சாகருப்பு இப்போது அமைச்சராக இருக்கும் ஒருநடிகரை நினைவுபடுத்துகிறார்.
இயக்குநர் பேரரசு,பயில்வான் ரங்க்நாதன் ஆகியோர் நன்று.
படத்தில் நாயகி இல்லை என்கிற குறைதீர்க்க ஒருபாடலுக்கு வந்துபோகிறார் அக்ஷரா விஜய்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர்,இசையமைப்பாளர் துளசிராமன், படத்தொகுப்பாளர் துர்கேஷ் ஆகியோர் தங்கள் பணிகளைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ராம்தேவ்,படைத்திருக்கும் கதாபாத்திரங்கள் அப்படியே தற்கால ஆட்சியினரைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.முட்டா முட்டா முட்டா ஊருதான் என்கிற பாடலில் மக்களின் முகத்திலறைந்திருக்கிறார்.
பார்க்கும்போது சிரிப்பும் சிந்திக்கும்போது பயத்தையும் கொடுக்கும் படம்.
– இளைய சந்திரன்











