இயக்குநர் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளர் – ஜெய் பட பஞ்சாயத்து
கன்னடத்தில் வெளியான சீசர் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வினய் கிருஷ்ணா.இவர் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ஒர்க்கர்.ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த ஆண்டு மே முதல்தேதி இப்படம் தொடங்கப்பட்டது.அப்போது படநிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS)நிறுவனம் சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இவர்களுடன் நாகிநீடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.
ரொமான்ஸ் ஆக்ஷன் திரில்லர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகும் இப்படத்தின் தலைப்பை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.
படம் குறித்து இயக்குநர் வினய் கிருஷ்ணா கூறுகையில்,முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், ரொமான்ஸ் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இதுவரை பார்த்திராத கற்பனைக் கதையாகச் சொல்வது இப்படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.
இந்தப் படத்திலும் ஹீரோ,ஹீரோயின் இடையிலான காதல்,அந்தக் காதலுக்கு வரும் பிரச்சனைகளை ஆக்ஷன் திரில்லர் பாணியில் சொல்லியிருந்தாலும், வழக்கமான பாணியில் சொல்லாமல்,படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களால் யூகிக்க முடியாதபடி திரைக்கதை பல திருப்பங்களோடு பயணிக்கும்.ஏன் இப்படி நடக்கிறது? இதற்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது? என்பதை எந்த இடத்திலும் யாராலும் யூகிக்க முடியாது என்பது உறுதி.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறோம்.படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு,படத்தொகுப்பு என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
4 பாடல்கள் மற்றும் 5 சண்டைக்காட்சிகளோடு உருவாக உள்ள ‘ஒர்க்கர்’ திரைப்படத்தின் காட்சிகளை சென்னை, பாண்டிச்சேரி, மைசூர், மங்களூர் ஆகிய பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இப்படம் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது.படப்பிடிப்பு தொடங்கி,பாண்டிச்சேரியில் பத்துநாட்கள், பெங்களூரில் பத்துநாட்கள் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இன்னும் படப்பிடிப்பு முழுமையடையவில்லை.இந்த நிலையில்,படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.படப்பிடிப்பில் அவர் நடந்துகொண்ட முறை, படப்பிடிப்புச் செலவுகளில் முறைகேடு என இயக்குநர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்தனவாம்.
ஒவ்வொருமுறையும் அதுபற்றி அவரிடம் பேசி சமாதானம் செய்து வேலைகளைத் தொடங்கினாலும் மறுபடி அதே தவறுகளைச் செய்கிறார் என்பது தயாரிப்புத் தரப்பின் குற்றச்சாட்டு.
இதனால்,இயக்குநர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.அவர்கள் இதுகுறித்து இருதரப்பாரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
இதனால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.இதன் காரணமாக, நாயகன் ஜெய் உட்பட அப்படத்தில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் நொந்துபோயிருக்கிறார்களாம்.











