இன்றிரவு இரு முன்னணி டிஜிட்டல்தளங்களில் வெளியாகிறது காளிதாஸ் 2 – விவரம்
2026 ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் காளிதாஸ் 2.ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான இப்படம், 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம்.
காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.இதில் பரத்துடன் அஜய் கார்த்தி இன்னொரு நாயகனாக நடித்திருந்தார்.இவர்களுடன்,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்த இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருந்தார்.துரைராஜ் கலை இயக்கத்தையும்,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளையும் கவனித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணிக்கிறார்கள்.அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பரத். அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை. குற்றவாளி பரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறார் ஆகிய விசயங்களை வைத்து பரபரப்பு படபடப்பான த்ரில்லர் படமாக இப்படம் இருந்தது.
முதல்பாகத்தைப் போலவே இதையும் வெற்றிப்படமாக ஆக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில்,விறுவிறுவென படத்தைக் கொண்டு சென்றிருப்பதோடு எதிர்பாராத திருப்பங்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு பாகத்துக்கான வியக்கத்தக்க குறிப்பையும் கொடுத்திருந்தார்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் இப்போது டிஜிட்டல் ப்ளாட்பார்ம் எனப்படும் இணையதளங்களில் வெளியாகவிருக்கிறது.
மார்ச் 12 முதல் இப்படம் இரு முன்னணி தளங்களில் வெளியாகவிருக்கிறது.
சன்நெக்ஸ்ட் மற்றும் அமேசான்ப்ரைம் ஆகிய இரண்டு முன்னணி தளங்களிலும் இப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது.
பொதுவாக ஒரு தளத்தில் வெளியாகும் படத்தை இன்னொரு தளத்தில் வெளியிட விரும்பமாட்டார்கள்.அதேநேரம்,ஒப்படம் இரசிகர்களிடம் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிற படங்கள் இன்னொரு தளத்தில் இருந்தாலும் தாழ்வில்லை நம் தளத்திலும் இருக்கவேண்டும் என இணைய நிறுவனங்கள் நினைக்கும்.
அந்தஇடத்தில் இந்தப்படமும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், இப்படம் ஒரேநேரத்தில் இரண்டு தளங்களிலும் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.











