டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது குறித்த ஆதரவு மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் டிஎன் 2026.
வடமாநிலத்தைச் சேர்ந்த நட்டி,பிழைப்புக்காக சென்னை வருகிறார்.வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு அவரை நடிகராக்கி,பின்பு உச்ச நடிகராக்கி விடுகிறது.அவருக்கு உதவியாக உறுதுணையாக இருக்கிறார் தம்பி ராமையா.அவர் நட்டியை அரசியலில் ஈடுபட வைக்கிறார்.2026 ஆம் ஆண்டில் அவர் முதலமைச்சராவார் என்கிற ஆசையையும் விதைக்கிறார். அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை நையாண்டியுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
குல்கந்த்குமார் என்கிற பெயரில் உச்சநட்சத்திர வேடமேற்றிருக்கிறார் நட்டி.நடிகர் விஜய்யை நினைவுபடுத்தும் தோற்றம் ரஜினியை நினைவுபடுத்தும் நடிப்பு ஆகியனவற்றோடு அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப பொருத்தமாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகன் நட்டியின் அத்யந்த சேவகராக நடித்திருக்கிறார் தம்பி ராமையா.அவருடைய அனுபவ நடிப்பும், வசனங்களும், அவற்றை அவர் உச்சரிக்கும் விதமும் அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
கதாநாயகிகளாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஆகிய மூவர் இருக்கிறார்கள்.அவரவர் பிம்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி,எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோருடைய வேடங்களும் அவர்கள் நடிப்பும் நன்று.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பல்வேறு காலகட்டங்களைக் கொண்ட கதைக்கேற்ப ஒளியமைப்புகளை வடிவமைத்து காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் அரசியல் நையாண்டி நிரம்பி வழிந்து சுவை கூட்டியிருக்கிறது.
படம் சுவாரசியமாகப் போகவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம்.
நடிகர்களின் அரசியல் ஆசையை மையமாகக் கொண்டு கதை எழுதியிருக்கிறார் தம்பி ராமையா.அவர் எழுதிய கதைக்கு, எம்ஜிஆர்,ரஜினி, கமல்,விஜய் உள்ளிட்டோரை நினைவுபடுத்தும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது நன்று.
இந்தப்படத்தை இயக்கியிருப்பது தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா.
முற்காலம் முதல் தற்காலம் வரை அரசியலுக்கு வருகிற நடிகர்களின் எண்ணங்கள்,அதற்கான பின்னணிகள்,வந்த பின்னான நடவடிக்கைகள் ஆகியனவற்றோடு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
அரசியல் தலைவராக வேண்டும்,அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிப்பொறுப்பேற்றுவிட வேண்டுமென்று ஆசைப்படுகிற நடிகர்களுக்கும் அவர்களைப் பின் தொடருபவர்களுக்குமான பாடமாக வந்திருக்கிறது இந்தப்படம்.
– இளையவன்











