சினிமா செய்திகள்

ஏப்ரல் 3 இல் எல்ஐகே வராது? – புதிய தகவல்

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல்ஐகே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).அறிவியல் புனைகதை அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலைக் காப்பாற்ற போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கதை, இளம்தலைமுறையைக் கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிரித்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரி கிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் சீமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும்,இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொள்ள,கலைஇயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை டி.முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார்,ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களான தீமா தீமா, பட்டும்மா,மற்றும் எனக்கென யாருமில்லையே ஆகியன வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் இரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 18 அன்று படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,இந்தப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறியிருந்தது.

அதனால், ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட காளிதாஸ் 2, லீடர் ஆகிய படங்கள் முறையே ஏப்ரல் 10 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில்,இப்போது இந்தப்படம் அறிவித்தபடி வெளியாகாது என்றொரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

இதற்குக் காரணம், படம் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பது ஒன்று, இன்னொன்று தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான பணப்பரிமாற்றச் சிக்கல் தீரவில்லை என சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கான குரல்பதிவை நாயகன் பிரதீப் ரங்கநாதன் இன்னும் முடிக்கவில்லையாம்.அவர் உடனடியாக வந்து பேசவேண்டும் என்றால் அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சம்பள பாக்கியைக் கொடுத்தாக வேண்டும்.அதைக் கொடுப்பது யார்? என்ன கணக்கு? என்பதில் தொடங்கி பல விசயங்களில் இருவருக்குமான கருத்து வேறுபாடு தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இன்னும் பத்துநாட்களுக்குள் இவற்றை எல்லாம் சரிசெய்து படத்தை வெளியிடுவது மிகவும் சிரமம் என்பதால் இந்தத் தேதியிலும் படம் வராது என்று சொல்கிறார்கள்.

இப்படம் வெளியீடு குறித்து,2024 மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.சொன்னபடி அப்போது அந்தப்படம் வெளியாகவில்லை.

அதன்பின் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போதும் படம் வெளியாகவில்லை.

அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்தத் தேதியிலும் படம் வெளியாகவில்லை.

அதை கடைசிநேரத்தில்தான் சொன்னார்கள். அப்போதே இப்படம் 2026 பிப்ரவரி மாதம் காதலர்நாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.ஆனால்,அப்போதும் படம் வெளியாகவில்லை.

அடுத்து,ஏப்ரல் 3 அன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.

இப்போதும் வராது என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts