செய்திக் குறிப்புகள்

அஜய் கார்த்திக்குக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது – பா.இரஞ்சித் நம்பிக்கை

2019 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.விமர்சன ரீதியாகவும்,வசூல்ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல்பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.அதேபாணியில், இந்த இரண்டாம்பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என்.யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’,‘கருடன்’,‘மகாராஜா’ போன்ற வெற்றிப்படங்கள் வெளியானதால்,‘காளிதாஸ் 2’ படத்திற்கும் திரையுலகத்திலும் இரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20 அன்று நடைபெற்றது

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது…..

இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்,தென்மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும்,பத்திரிகை,ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம்.இந்தப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிகமுக்கியமானது.நீங்கள் தரும் ஆதரவும்,வெளிச்சமும் இந்தப்படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழுநம்பிக்கை உள்ளது.இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.வணக்கம் என்றார்.

யோகேஷ்வரன் பேசியதாவது…..

என்னோட பெயர் யோகேஷ்.இந்தப்படத்தில் நான் பெரியபங்கு எடுத்துக் கொள்ளவில்லை.இந்தப்படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில்சார் மற்றும் நாராயணசாமிசார்.அவர் என்னோட அப்பா.மேடைக்கு வரச்சொன்னாலும் வரமாட்டார்; என்னைத்தான் அனுப்பிவைத்தார்.முதலில்,இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரியஅளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி.பலநாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறோம்.அது கண்டிப்பாக நல்லதொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.பரத் சார் இந்தப்படத்துக்கு ஒரு பெரியபலமாக இருக்கிறார்.இந்தப்படம் தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்லவரவாக இருக்கும்.இயக்குநர் சார் இந்தப்படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார்.தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.இந்தப்படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,

இது ரொம்ப சந்தோசமான விசயம்.ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத்துறையில் பெரியஅளவில் அறிமுகப்படுத்தும் முதல்விழாவாக இதைப்பார்க்கிறேன்.அது மிகவும் பெருமைக்குரிய விசயம்.சினிமாவில் சம்பாதித்த பலர் வேறுதுறைகளில் முதலீடு செய்திருக்கலாம்.ஆனால்,சம்பாதித்த அதே சினிமாதுறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்துவந்து அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய விசயம்.அதுவே இந்தநிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன்.அதிலும்,ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து,பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து,ஒரு பெரிய வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப்படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர்.அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர்.நாராயணசாமி சார் பற்றிச் சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம்.இந்தக்குழு,சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல்,அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக்குழுவினர் எல்லாத்தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடையவேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்.என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.

தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது…..

செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்தநிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விசயம்.அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார்,எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார்.ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோசமான விசயம்.அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல,தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல்படமும் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்த முதல்முயற்சி மிகச்சிறப்பாக அமையும்.அஜய்க்கும் எனது வாழ்த்துகள்.முதல்படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம்.அவர் நல்லமுறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
பரத்,உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் இரசித்து இரசித்துப் பார்த்தவன்.அந்தப்படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,அந்தமாதிரி ஒருபடம் எளிதாக வராது.அந்தப்படம் எங்கள் மேல் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன.சிறை படத்தின்போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப்படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்றுதான்.அந்தஅளவுக்கு அது மனதில் பதிந்த படம்.அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படம் பெரிய வெற்றிபெறவேண்டும்.நன்றி என்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது…..

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தவிழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில்சார்தான்.அவர் மிகவும் நல்லமனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம்.இந்தப்படம் முழுகுழுவுக்கும் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.நன்றி என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…..

‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்தபடம்.அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது.அதனால்,‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதேமாதிரி ஒரு ஆச்சரியம் நமக்குக் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.குறிப்பாக,ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.இன்று ஃபைவ்ஸ்டார் செந்தில் சார்,விநியோகத்துறையில் ஆரம்பித்து,அவர் கைவைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப்படம் வெற்றிபெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது.மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல,டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அடுத்தகட்டமாக,தனது மகனை அறிமுகப்படுத்துகிறார்.அது மிகவும் மகிழ்ச்சியான விசயம்.இங்கே ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லவேண்டும் என்றால்,ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள்.கல்யாண்சாரின் மகன் ஹரிஷ்கல்யாண் இருக்கிறார்.செந்தில்சாரின் மகன் அஜய்கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன்சாரின் மகனும் வரவிருக்கிறார்.ஒருநாள் இந்த மூன்றுபேரும் சேர்ந்து நடிக்கும் ஒருபடம் வரவேண்டும்.‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒருபடம் உருவாகவேண்டும்.அந்த ஆசை எனக்குள்ளது.
இன்றைக்கு தமிழ்சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட,கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ்சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது.நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும்,இரசிகர்கள் அதை பெரியஅளவில் ஏற்றுக்கொள்கிறார்கள்.இன்றைக்கு தமிழ்சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை;நல்லகதைகளையும் நல்லபடைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள்.சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது.இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் விசயம்.அந்தஅளவுக்கு தமிழ்சினிமா வளர்ந்திருக்கிறது.அந்தவரிசையில்,இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும்.செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே,இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவேண்டும்.இந்தப்படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு,மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் என் நன்றி. வணக்கம் என்றார்.

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது…..

டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது.ஃபைவ்ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல,அவர் ஏற்கனவே படத்தைப் பார்த்திருக்கிறார்.அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால்,படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்,அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும்.டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும்,மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து,இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம்.அதிலும்,தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல்,தனது மகனையும் இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது.அவருக்கும்,அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும்.குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில்,இந்தப்படம் அந்த வெற்றியைக் கண்டிப்பாகத்தரும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள்.நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும்,தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது…..

இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில்,இன்னொருவர் நண்பர் நாராயணசாமி.செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார்,நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.ஆகவே,இந்தவிழாவில் நான் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.என்னுடைய நாயகன் பரத்,இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன்.அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக்கூடிய திறமையான நடிகர்.ஆகவே,அஜய்கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை.மிகவும் நல்ல விநியோகஸ்தர்.விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்லவிசயம்.நானும் அந்தப்பாதையில் வந்தவன் என்பதால்,இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத்துறைக்குள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.ஆனால் வருவதற்கு முன்அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
டிரெய்லரைப் பார்த்தபோது,பின்னணிஇசை மிகவும் கவனம் ஈர்த்தது.சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார்.அவர் திறமையான இளம் படைப்பாளி.அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து,தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இந்தப்படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று,இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி என்றார்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,

செந்தில் சார் ஒரு பயங்கரமான ஹார்ட் ஒர்க்கிங் மனிதர்.அவரை எனக்கு பத்துவருடங்களாகத் தெரியும்.எந்தப்படத்தையும் சுமாராகச் செய்யாமல்,தேர்ந்தெடுத்து,யோசித்து,ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர்.மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும்,நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும்,அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிகப்பெரியது.அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார்.அவருடைய மகன் அஜய் இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம்.அஜய்,உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப்படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு.ஏனெனில்,கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து,இன்னும் இந்தத்துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு,அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத்.அது பெரிய விசயம்.அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்லஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல்,சாம் சி.எஸ்.போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப்படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல்பலம்.அவர் இசையும் இந்தப்படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.செந்தில் சார்,நாராயணசாமி சார்,அஜய்,பரத் மற்றும் இந்தப்படத்தின் முழுக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.

நடிகர் சாந்தனு பேசியதாவது…..

இந்தமேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விசயம்.முதலில் இந்தப்படத்தின் முழுகுழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டிரெய்லரை இரண்டுமுறை பார்த்தேன்.உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால்,அது மிகவும் வொர்த்தாக இருந்தது.‘காளிதாஸ்’ முதல்பாகம் எல்லோருக்கும் பிடித்தபடம்.அதேபோல,அதைவிட டபுள்இம்பாக்ட் கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.அந்தஅளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது.அதனால் இயக்குநர் முதல் இந்தப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.ஏனெனில்,பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன்.அந்தஅளவுக்கு எனக்கு பரத்தை ரொம்பப்பிடிக்கும்.அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.இந்தடீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர்.ஒருவர் பரத்,இன்னொருவர் பவானி.பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன்.அவ்ங்க ரொம்ப சின்சியரான ஆர்டிஸ்ட். இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன்.அதேநேரத்தில் கேமரா முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.அவர் நடித்த எல்லாக் கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு தெரியும்.‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப்பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்துவருகிறார்.
அஜய்,இது உங்களோட அறிமுகம்.ஆனால் வெற்றிகள்,தோல்விகள்,இதையெல்லாம் தாண்டி,அமைதியா,உறுதியா,தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்துகொண்டு,50-க்கும் மேற்பட்ட படங்களைக் கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்தப் பயணத்துக்கான கொண்டாட்டமாக இந்தவிழாவைப் பார்க்கிறேன்.மொத்தத்தில்,இந்தப்படம் இந்த மொத்தக்குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும்.அஜய்க்கு ஒரு மிகச்சிறந்த அறிமுகமாக இருக்கவேண்டும்.பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையவேண்டும்.ஸகை பிக்சர்சுக்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்கவேண்டும்.வாழ்த்துகள் என்றார்.

நடிகர் கலையரசன் பேசியதாவது…..

‘காளிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது.நான் படத்தையும் பார்த்திருக்கிறேன்.நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்கமுடியாததாக இருக்கும்.அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி,எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள்.அஜய்,உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.இது உங்கள் முதல்படம்.அதேநேரத்தில்,இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.ரொம்ப சந்தோசம்.ஒரு நல்லபயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
பரத்… லவ் யூ,எப்போதுமே.பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரியஸ்டார்.இப்போவும் அதேமரியாதையோட இருக்கிறார். ஆனால் சிசிஎல் மாதிரி இடங்களில் நெருக்கமாகப் பழகியபிறகு,அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.
சினிமா உலகத்தில் வெற்றி,தோல்வி,பாராட்டு,அதிருப்தி ஆகிய எல்லாமே ரொம்ப வேகமாக வரும்.அதைக் கையாள தைரியமாக இருக்கணும்.அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதேதான்.அந்தமாதிரி சூழலில்,உச்சத்தையும் பார்த்து,தடைகளைச் சந்தித்து,மறுபடியும் அதே ஃபயரோட திரும்பிவருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறையக் கற்றிருக்கிறேன்.அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன்.அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.இந்தப்படம் கண்டிப்பாக பெரியஹிட்டாகும் என்று எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.‘காளிதாஸ் 2’,முதல்பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.நன்றி என்றார்.

ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது…..

‘காளிதாஸ்’ முதல்பாகத்தில் எனக்கு ஒரு நல்லகதாபாத்திரம் கிடைத்தது.அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்லநினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது,அஜய்க்கு இந்தப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்லகதையைத் தேர்ந்தெடுத்து,அழகாக இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன்.ஒரு அறிமுகநடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச்சிறந்ததாக இருக்கும்.அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படத்தின் முழுக்குழுவினருக்கும் — பரத், பவானி,ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும்.நன்றி என்றார்.

இயக்குநர் கணேஷ் கே.பாபு பேசியதாவது…..

நான் இந்தப்படத்தை பார்த்துவிட்டேன்.இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய்தான்.அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி.எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது.அஜய்யை நான் முதல்நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்தபிறகு,கடந்த மூன்றுவருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன்.முதல்நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன்.அந்தநேரத்தில் அவருக்கு சினிமாபற்றி பெரிய ஐடியாவே இல்லை.நடிப்பு பற்றியும் இந்ததுறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார்.ஆனால் அந்த நிலையிலிருந்து,முழு படப்பிடிப்பு முடியும்வரை அவர் எவ்வளவு பெரியமாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம்.நேரில் பழகும்போதும் சரி,திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய்.நீங்க இன்னும் பெரியஅளவுக்கு வரணும்.
பரத் சாரோட பெரிய இரசிகன்.நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்;நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன்.இந்தப்படத்தில் அவரும் மிகப்பெரிய பலம்.செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.படம் ரொம்ப நன்றாக இருக்கிறது.நான் பார்த்தபோது,படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது.ஆனால்,அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும்வகையில் அவர் எடுத்திருக்கிறார்.
இந்தப்படத்தின் முழுகுழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப்படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார்.கண்டிப்பாக இந்தப்படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்லபடமாக இருக்கும். முழுகுழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது……

செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்டநாளாக நண்பர்கள்.நாராயணசாமி சார்,வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்துவரும் ஒரு நல்லநண்பர்.இருவரும் என்னை அழைத்தார்கள்.நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம்,இந்தப்படத்தை முதலில் பார்த்துவிட்டு,அப்படியே அந்த உணர்வோடு இந்தவிழாவுக்கு வந்ததுதான்.ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன்விழாவிற்க்கு வருவது ரொம்ப ஸ்பெஷல்-ஆன உணர்வு.உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால்,படம் ரொம்ப நன்றாக இருந்தது.இதை நான் அவர்களிடம் தனியாகச் சொல்லவே இல்லை;இந்தமேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.
சாம் சார்,உங்கள் பின்னணிஇசை செமையாக இருந்தது.இப்போது பலபடங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது.ஆனால் இந்தப்படத்தில் கூட,அந்த பின்னணி இசையில் ஒரு தனித்தன்மை இருந்தது.படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்குப் பிடித்திருந்தது.
அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்லவேண்டும்.இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி,இந்தப்படத்துக்குள்ளே ட்விஸ்ட் இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே ட்விஸ்ட்களால் நிரம்பியுள்ளது.ஒவ்வொரு காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதியஆச்சரியம் காத்திருக்கிறது.அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.பரத் சார்,உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.சங்கீதா மேம்,நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம்.பவானி உட்பட இந்தப்படத்தில் நடித்த அனைவரும்,தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.
அஜய் கார்த்திக்,நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம்.உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்லபடம்.ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.மனமார்ந்த வாழ்த்துகள்.‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ்சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்;அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள்.இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துகள்.

பா.இரஞ்சித் பேசியதாவது…..,

செந்தில் சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து,என்கூட நிறைய விசயங்களைப் பகிர்ந்து,சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம்.அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது.நண்பர்களாக மட்டும் இல்லாமல்,சினிமாவைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோசம் தருகிறது.
நான் இந்தப்படத்தை பார்த்துவிட்டேன்.உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால்,இது மிகவும் இன்ரெஸ்டிங்கான ஒருபடம்.இந்தப்படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம்,பவானி,அபர்ணா ஆகிய மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள்.பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர்.கதை சொல்லப்பட்ட விதம்,மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு,இயக்குநர்,தயாரிப்பாளர்கள்,மற்றும் தொழில்நுட்பக்குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள்.அந்தமுயற்சி இந்தப்படத்திலும் நிச்சயமாகப் பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய்கார்த்திக்,உங்களுடைய நடிப்பு, லுக்,எல்லாமே நன்றாக இருந்தது.கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சாம் சி.எஸ்.அவர்களின் பின்னணி இசை இந்தப்படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது.படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை,அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன் மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக்கொண்டு போகிறது.ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப்பெரிய பலம்.இந்தப்படம் அந்தவகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சில சிறியபடங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று,தமிழ்சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன.முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது.ஒருபடம் நல்லபடம் என்று நம்புவோம்;ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம்.இப்போது அந்தநிலை மாறிக்கொண்டு வருகிறது.அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது.அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடரவேண்டும்.இந்தப்படம் நிச்சயமாக பெரியவெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன்.எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.மகிழ்ச்சி.நன்றி என்றார்.

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…..

முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள்.இனிமேலும் நல்லகதைகள்,நல்லநடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ்சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது.இன்னொரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால்,அஜய் கார்த்திக் என் தம்பி.அவர் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.வாழ்த்துகள் அஜய்.உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும்,விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும்,பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப்பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பரத் பற்றி நிறையப்பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள்.அதற்கு மேலாக நான் ஒரு விசயம் மட்டும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள்.பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள்.ஆனால் இந்தப்படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அது எல்லோராலும் செய்யமுடியாத ஒன்று.கதையை நம்பி,மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.பற்றிச் சொல்லவேண்டும் என்றால்,அவரையும் பின்னணி இசையையும் பிரித்துப் பார்க்கமுடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும்,அவருடைய பின்னணி இசை இந்தப்படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மிகுந்த மகிழ்ச்சி.
இந்தப்படத்தில் நடித்த பவானி ஸ்ரீ,அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.இந்தப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்துக்கலைஞர்களுக்கும்,தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.‘காளிதாஸ்’ முதல்பாகம் போலவே,‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழுநம்பிக்கையுடன் கூறுகிறேன்.நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…..

முதலில் இந்தவாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி.இன்று இந்தமேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது.எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.‘காளிதாஸ்’ முதல்பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக்கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.ஒரு விசாரணை திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல.ஆனால் இந்தப்படத்தில் கதை,திரைக்கதை,திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது.நான் சின்னபடம்,பெரியபடம் என்று பார்க்கமாட்டேன்.நல்லபடம் என்றால் போதும்.இந்தப்படமும் அப்படிப்பட்ட ஒரு நல்லபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி.எனக்கு துணையாக இருந்த என் இசைக்குழுவினருக்கும்,பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும்,ஒலிக்கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி.பரத் சார் இந்தப்படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும்.அவருடன் பணியாற்றியது சந்தோசம்.சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.இப்போது மக்கள் பெரியஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல்,படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள்.அந்தவகையில் இந்தப்படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும்.எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப்படத்தைப் பாருங்கள். இந்தப்படம் நிச்சயமாக வெற்றிபெறும்.நன்றி.வணக்கம் என்றார்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது….

இந்தப்படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர்.அதேசமயம்,‘காளிதாஸ்’ என்ற வெற்றிப்படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விசயம்.முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.ஒருகதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல.அந்தமுயற்சிக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அஜய் கார்த்திக்குக்கும்,இவருடன் நடித்த அபர்ணதி,பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.ஃபைவ்ஸ்டார் செந்தில் சார் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விசயம்.
இன்று தமிழ்சினிமா ஒரு நல்லமாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது.சிறியமுதலீட்டில் உருவாகும் நல்லபடங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது.இது புதியதிறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்லநம்பிக்கையைத் தருகிறது.இந்தப்படத்தில் பணியாற்றிய இயக்குநர்,சாம் சி.எஸ். மற்றும் முழுக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.

நடிகை அபர்ணதி பேசியதாவது….

முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் உங்கள் வழியாகத்தான் ஆரம்பமானது.இயக்குநர் செந்தில் சாருக்கும், ஃபைவ்ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள்.அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நேரில் பார்க்கிற அஜய்யும்,திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு.அந்தமாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது.பரத் சார்,உங்களுக்கு வாழ்த்துகள்.சங்கீதா மேம்,மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி.இந்தப்படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள்,நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘காளிதாஸ் 2’, முதல்பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன்.இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம்.என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்கமுடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்,இந்தப்படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்தப்படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

நடிகை பவானி பேசியதாவது….,

முதலில் செந்தில் சாருக்கு நன்றி.இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல்,அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்குக் கொடுத்தார்.அதற்காக ரொம்ப நன்றி சார்.பரத்சார் மிகஅனுபவம் வாய்ந்த நடிகர்.அவரிடமிருந்து நிறைய விசயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது.சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது.அஜயும் நானும் ஒரேநடிப்பு வகுப்பில் படித்தவர்கள்.அவர் இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது எனக்கு ரொம்ப சந்தோசம்.அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார் இந்தப்படத்திற்கு பின்னணிஇசையால் பெரியபலம் சேர்த்திருக்கிறார்.ஒளிப்பதிவாளரும் இந்தப்படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.பிரகாஷ்ராஜ் சார்,கிஷோர் சார் போன்ற மூத்தநடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம்.மிக்க நன்றி என்றார்.

நடிகை சங்கீதா பேசியதாவது…..

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு,எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒருபடத்தில் நடித்து,அதன் வெளியீட்டுவிழாவில் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன்.முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.என்னை நம்பி இந்தக்கதையைச் சொல்லி,எனக்கு மிகவும் பிடித்த இந்தத்துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி.அதேபோல், இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும்.இதன்பிறகும் இன்னும் பல நல்லபடங்களை உருவாக்கவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இரவுநேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும்,முழுக்குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள்.அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது.பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது.மிகவும் எளிமையான,அன்பான,மரியாதையான மனிதர்.அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது.
அஜய் மிகவும் மென்மையான மனிதர்.ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார்.மிக நன்றாக நடித்திருக்கிறார்.அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை.கேமரா முன் வந்தவுடன் முழுகதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனியகுணம் கொண்டவர்.அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.சாம் அவர்களின் இசையுடன் இந்தப்படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப்படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்கவேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழுநம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால்,அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப்படத்தைப் பார்த்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,

இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிகை,ஊடக நண்பர்கள்,குடும்பத்தினர்,நண்பர்கள்,சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தமேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல்,சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன்.இந்தவாய்ப்பு எனக்குக் கிடைக்கக் காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும்,என்னை நம்பி இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு,தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்தமேடை.இந்தப்படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார்.தயாரிப்பாளர்களான செந்தில் சார்,டாக்டர் யோகேஷ்வரன்,நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது.அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.,பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப்படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா,உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரியஅனுபவம்.நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது.பவானி,சங்கீதா மேம்,அபர்ணதி,துரை அண்ணா,ஆனந்த்,குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது.என் அப்பாவுக்கும்,குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி.இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப்படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடரவேண்டும்.‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி என்றார்.

இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது…..

முதலில் இந்தமேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டுப் போயிடலாம் என்று நினைத்தேன்.ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை.அது ஒரு நீண்ட,உணர்ச்சியான,நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல்பாகத்தின் வெற்றிக்குப் பிறகு,பெரிய வாய்ப்புகளும் பெரியநடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பலசூழல்கள் மாறின.அப்போது எனக்கு ஒரு முக்கியமான விசயம் புரிந்தது — பெரியபடம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக,நல்லபடம் பண்ணணும் என்பதுதான் முக்கியம்.அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப்பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி.அதன்பிறகு இந்தப்படத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார்,நாராயணசாமி சார்.நான் ஒரு நல்லபடமாக நினைத்ததை,அவர்கள் பெரியஅளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள்.படம் திரைக்கு வரும்போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும்.அஜயை இந்தப்படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப்பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு.அந்த சந்திப்பு மிகச்சாதாரணமாகத் தொடங்கியது.ஆனால்,இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.
இந்தப்படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு,மிகவும் கடினமான சூழலில் உருவானது.மாலை ஆறுமணிக்கு தொடங்கி,காலை ஆறுமணி வரை,சிலசமயம் அதையும்தாண்டி படப்பிடிப்பு நடந்தது.ஆனாலும், எல்லாரும் எந்தப்புகாரும் இல்லாமல்,முழுஅர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப்படம் இவ்வளவு நன்றாக நம்முன் நிற்கிறது.
என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கடைசியாக,எனக்குப் பெரியதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லவேண்டும்.நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு,சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது,என்னைத் தாங்கிப்பிடித்தது என் குடும்பம்தான்.என் மனைவியும்,என் குழந்தைகளும்,என் கனவை என்னுடன் சுமந்தவர்கள்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.இந்தப்பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய பலம்.‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.மிக்க நன்றி என்றார்.

நடிகர் பரத் பேசியதாவது….

‘காளிதாஸ்’ 2019 இல் தொடங்கிய ஒரு பயணம்.என் நடிப்பு வாழ்க்கையில் பல புதியஇயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது.ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால்,அந்தப்படத்தின் பாதிவெற்றி அங்கேயே உறுதியாகிவிடும்.எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்லஇயக்குநராக செந்தில் சார் அமைந்தார்.அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம்.‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம்.அந்தப்படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக்கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிகமகிழ்ச்சி தருகிறது.
இந்தப்படம் ஆரம்பத்தில் ஒரு சின்னக்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது.ஆனால் செந்தில் சார்,நாராயணசாமி சார்,யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரியபடமாக மாறியது.இந்தக்கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப்படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது என் படமென்பதற்காக மட்டுமல்ல,இந்தப்படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல.இதில் உணர்ச்சி உள்ளது,மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது.ஆரம்பத்திலிருந்து முடிவுவரை பார்வையாளரைப் பிடித்துவைத்துச் செல்லும் வலிமை இந்தப்படத்துக்கு இருக்கிறது.
என் கூட நடித்த நடிகர்கள் பற்றிச் சொல்லவேண்டும் என்றால்,பவானி இந்தப்படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்.அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரியமகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம்.இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும்.உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ்.சார்,இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் உங்கள் இசைதான்.ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப்படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள்,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழுநம்பிக்கை எனக்கிருக்கிறது.நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts