February 20, 2026
Uncategorized

லவ் ஷேர் சப்ஸ்க்ரைப் – பட விமர்சனம்

காதல் என்பது காதலிக்கும் இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமன்று.அது இரண்டு குடும்பங்களுக்குமானது என்றொரு கருத்தை மையமாக வைத்திருக்கும் படம் எல் எஸ் எஸ். அதாவது லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப்.

நாயகி சிம்ரனுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல். நாயகன் விலகிப் போனாலும் துரத்தித் துரத்தி காதலிக்கிறார்.அதன்விளைவாக நாயகன் மட்டுமின்றி அவருடைய பெற்றோர் சம்மதமும் பெறுகிறார். அதன்பின், தன்னுடைய தாயைத் தேடுப்போகிறார் நாயகி. அப்போது பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.

புதுமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார்.முதல்படத்திலேயே காதல், பாசம் ஆகியன மட்டுமின்றி நகைச்சுவையும் செய்ய வேண்டிய வேடம். கடினமானவை என்றாலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.

நாயகி சிம்ரனுக்கும் காட்சிப்பொருளாக மட்டுமின்றி அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடம். சரியாகச் செய்திருக்கிறார்.

படவா கோபி, வினோதினி,ஜாவா சுந்தரேசன், தனஞ்செயன்,ரோகித், முத்து புவன் உள்ளிட்ட நடிகர்களும் தத்தம் வேலைகளை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

என்.எஸ்.சதீஷ்குமார் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.காசி நகரத்தை அவர் பார்வையில் பார்த்து நமக்கு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுத்திருக்கிறார்.

அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை மூலம் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் என்.பி.ஶ்ரீகாந்த் உழைப்பில் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

கதை வசனம் எழுதியிருக்கும் அசோக் அமிர்தராஜ், காதல் கதையை மாற்றி யோசித்திருக்கிறார். அதோடு காதலையும் குடும்பத்தையும் இணைத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். காதல் கதைக்குள் இருக்கக் கூடிய பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தக் கூடிய கதைக்கு வெகுமக்கள் விரும்பும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட விசயத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்.

– இளையவன்

Related Posts