ஜனநாயகன் வெளியீடு தள்ளிவைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது
இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்குச் சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜனவரி 9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு பத்தரை மணியளவில் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9 ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










