விமர்சனம்

இந்திரா – திரைப்பட விமர்சனம்

நாயகன் வசந்த்ரவியும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடாவும் கணவன் மனைவி.வசந்த்ரவி காவல்துறை ஆய்வாளர்.அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதனால் அதீத மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறார்.அவருக்குப் பார்வையும் பறிபோகிறது.அவருடைய கண்களாக மனைவி மெஹ்ரீன் இருக்கிறார்.இந்நிலையில் நகரத்தில் பல தொடர்கொலைகள்.அந்த வரிசையில் நாயகியும் சிக்குகிறார்.அதன்பின் நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதற்கான விடைதாம் படம்.

காவல்துறை ஆய்வாளராக மிடுக்குடன் இருக்கும் வசந்தரவி, பணியிடை நீக்கம் மற்றும் பார்வை இழத்தல் ஆகிய நேரங்களில் அதற்குத்தக்க தன்னை மாற்றிக் கொண்டு வரவேற்புப் பெறுகிறார்.அன்பு, பாசம், கனிவு ,சோகம், வேதனை, கோபம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடத்துக்கு நியாயமாக நடந்துகொண்டிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பீர்சாடா அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்.பொறுப்பான மனைவிகளின் பிரதிநிதியாக இருந்து இரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

கொலைகாரராக நடித்திருக்கும் சுனில்,அதற்குத் தக்கவாறு அனுபவித்து நடித்து பாரவையாளர்களைப் படபடக்க வைத்திருக்கிறார்.

அனிகா சுரேந்தர்,நாகேந்திரா,கல்யாண்,ராஜ்குமார் ஆகியோரும் இயல்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் உழைப்பில் படம் தரமாக வந்திருக்கிறது.காட்சிகளின் உணர்வுகளுக்குத் தக்க ஒளியமைத்துப் படம் பிடித்திருக்கிறார்.

அஜ்மல் தஹ்சீன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை இந்தப்படத்துக்கு மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.

பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு படம் வேகமாக நகரப் பயன்பட்டிருக்கிறது.

சபரீஷ் நந்தா எழுதி இயக்கியிருக்கிறார்.மனநலன் பிறழ்ந்த கொலைகாரனின் கொலைவெறிகள் அவற்றுக்கு எதிராக நாயகனின் போராட்டம் என்கிற வழக்கமான கதைக்களம் என்றாலும் உள்பக்கம் தாழிப்பட்ட வீட்டுக்குள் கொலை நடந்தது எப்படி? என்பது உள்ளிட்டவற்றையும் சில எதிர்பாராத திருப்பங்களையும் திரைக்கதையில் வைத்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts