மதராஸி தமிழ்நாடு வியாபாரம் முடிந்தது – வாங்கியது யார்? ஏன்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.ஸ்ரீலட்சுமி மூவிஸ் எனும் தெலுங்குப் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
செபடம்பர் 5 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.விரைவில் முன்னோட்டம் மற்றும் மற்ற பாடல்கள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீடு வியாபாரம் நடந்து முடிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தை தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை சுமார் நாற்பது கோடி என்கிறார்கள்.இந்த வியாபாரம் எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் நடந்திருக்கிறது.
அதேசமயம், இந்தப்படத்தை அவர்கள் நேரடியாக வெளியிடாமல் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்து வெளியிடுகிறார்களாம்.அந்நிறுவனத்துக்கு அதற்காக ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தரகுத் தொகையை வேல்ஸ் நிறுவனம் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம்.
வேல்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் படம் உட்பட பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் மதராஸி படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் தான் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் என்றால் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கலாமே? எதற்காக இடையில் வேல்ஸ் நிறுவனம்? என்கிற கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன.
ஒன்று, ரெட்ஜெயன்ட் நிறுவனம் எம் ஜி அடிப்படையில் பணம் கொடுத்து படம் வாங்கமாட்டார்கள்.அதேசமயம் தயாரிப்பு நிறுவனத்துக்கு படத்தை வெளியிடும் நேரத்தில் இந்தப்பணம் அவசியத் தேவை.அதனால் இந்த வியாபாரம் நடந்திருக்கிறது என்பது ஒரு பதில்.
இன்னொன்று,வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒருபடம் நடிக்கவிருக்கிறார்.அதன் காரணமாகவே மதராஸி படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்களாம். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?
இவ்வளவு தொகைக்கு மற்றவர்கள் வாங்கத் தயங்கிய நேரத்தில் வேல்ஸ் நிறுவனம் இந்தத் தொகையைக் கொடுக்க முன்வந்திருக்கிறது.சிவகார்த்திகேயனை மகிழ்ச்சிப்படுத்தவே இவ்வளவு தொகைக்கு இந்தப்படம் வாங்கப்பட்டிருக்கிறது என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சு.











