சினிமா செய்திகள்

மலேசியா செல்கிறது ரெட்டதல படக்குழு – வியப்பூட்டும் விவரம்

அருண்விஜய் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ரெட்டதல. திருக்குமரன் இயக்குகிறார்.வெந்துதணிந்ததுகாடு பட நாயகி சித் இனானி,தான்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்துக்கு டிஜோஜோமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது என்றும் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் புதிதாக ஒரு பாடலைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.ஏற்கெனவே இருந்த திட்டம்தான் என்றாலும் ஒரு கட்டத்தில், படத்தின் செலவு அதிகரித்துவிட்டது என்கிற காரணத்தால் அந்தப்பாடல் இல்லாமலே படத்தை வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன்பின், படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்திருக்கிறார்கள்.படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகிய அனைவருக்கும் படத்தில் முழுத் திருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தில் அந்தப்பாடலைச் சேர்த்தால் இன்னும் நிறைவாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.தயாரிப்பு நிறுவனமும் அதை உடனே ஒப்புக்கொண்டதாம்.

அதனால் அந்தப்பாடல் பதிவு வேலைகள் தொடங்கி நிறைவடைந்திருக்கிறது.

நாயகன் அருண்விஜய்யின் நட்புக்காக ஒரு பெரிய கதாநாயகன் அந்தப்பாடலைப் பாடியிருக்கிறாராம்.

இதன்பின் அந்தப்பாடலுக்கான படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்திவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.ஆனால் பாடலின் தரத்திற்கேற்ப வெளிநாட்டில் படமாக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

இலண்டனில் அந்தப்பாடலுக்கான படப்பிடிப்பை நடத்த நினைத்து அதற்கான வேலைகளைப் பார்த்திருக்கிறார்கள்.அதற்கான அனுமதிகள் பெறுவது சிரமமாக இருந்ததால் இலண்டன் என்பதை மாற்றி மலேசியாவில் படமாக்கவிருக்கிறார்கள்.

இதற்கான அடிப்படை வேலைகள் முடிவடைந்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புக்காக அங்கு செல்லவிருக்கிறார்கள்.அந்தப் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் முதல்பிரதி தயாராகிவிடும்.அதன்பின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவிருக்கிறார்களாம்.

மொத்தமாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்ட படத்தைப் பார்த்த பின்பு இப்படி ஒரு முடிவை முழுமனதுடன் தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கிறது என்பதும் அதன்பின் மேலும் பெரும்தொகையைச் செலவிட முன்வந்திருப்பதும் இயக்குநர் குழுவிற்கும் நாயகன் அருண்விஜய்க்கும் பெரும் மகிழ்ச்சியாம்.

இந்தத் தகவல் திரைப்பட வியாபார வட்டத்திலும் பரவியிருப்பதால்,படத்தை வாங்கி வெளியிட பலர் முன் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts