விமர்சனம்

சீசா – திரைப்பட விமர்சனம்

ஒரு மர்மக்கொலை அது தொடர்பான விசாரணை என்று போகும் திரைக்கதை வரிசையில் இணைந்திருக்கும் படம் சீசா.இதுபோன்ற படங்களில் அந்த மர்மம் அவிழும் இடம் முக்கியமானது. இந்தப்படத்தில் அது என்னவாக இருக்கிறது? என்பதற்கான விடைதாம் படம்.

இளம் தொழிலதிபர் மற்றும் அவரது காதல் மனைவி ஆகிய இருவர் வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த தொழிலதிபரும் அவர் மனைவியும் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த கண்காணிப்புக் கருவியின் பதிவுகளும் காணாமல் போகிறது.

கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளருக்கு தொழிலதிபர் பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் தெரிய வருகின்றன.இந்நிலையில் தொழிலதிபர் மட்டும் வீட்டுக்கு வருகிறார்.அவர் மனநலம் குன்றியவராக இருக்கிறார். மனைவி என்னவானார்? என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.இவற்ரின் முடிவென்ன என்பதைச் சொல்கிறது திரைக்கதை.

கதையின் நாயகனாக காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி.அமைதியான அழுத்தமான விசாரணை அதிகாரி வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.சின்னச் சின்ன அசைவுகளில் தன் தனித்தன்மையைக் காட்டியிருக்கிறார்.

தொழிலதிபர் வேடத்தில் நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ,தன் வேடத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.அதனால் அவருக்கும் படத்துக்கும் பலம்.

தொழிலதிபரின் மனைவியாக நடித்திருக்கிறார் நாயகி பாடினி குமார்.குடும்பப் பாங்கான முகம்,திரைக்கதையின் மையமாக தன் கதாபாத்திரம் இருப்பதை உள்வாங்கி நடித்திருக்கிறார்.பாடல் காட்சியில் கவர்ச்சிகாட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.

தொழிலதிபரின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, வீட்டில் வேலை செய்பவராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம், உதவி காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவின்றிச் செய்திருக்கிறார்கள். 

சரண்குமார் இசையில்,காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.பாடல் வரிகளை மறைக்காமல் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை திரைக்கதைக்குப் பெரிதும் உதவி செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது உழைப்பில் படத்தின் தரம் உயர்ந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் வில்சி ஜெ.சசி, படம் தொய்வின்றி நகர வேண்டும் என்கிற சிரத்தையோடு பணியாற்றியிருக்கிறார்.

தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார்,இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் குணா சுப்பிரமணியம்.இப்படம் வெறும் பொழுதுபோக்குப்படமாக அமைந்துவிடாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கவேண்டும் என்கிற உறுதியோடு இயக்கியிருக்கிறார்.அதேசமயம் எவ்வளவு நல்ல கருத்தாக இருந்தாலும் அதைத் திரைமொழியில் சரியாக மொழிபெயர்க்கவில்லையெனில் மக்களிடம் போய்ச் சேராது என்பதால் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களுக்கு இணையாக இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

– சுரா

Related Posts