விமர்சனம்

எலக்சன் – திரைப்பட விமர்சனம்

சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார்.

ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற நினைப்பதோடு நில்லாமல் அதைச் செயலில் காட்டுகிற உண்மைத் தொண்டர்.அரசியல்வாதி என்றாலே மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழ்பவர் என்கிற பொதுப்புத்தியை அடித்து உடைத்து அரசியல் என்பது மக்கள் சேவை என்பதை உணர்த்தும் அரசியல்வாதி. ஆனால் அவருக்குக் கட்சியில் எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படுவதில்லை.அதைப் பற்றி அவர் கவலைப்படுவதும் இல்லை.ஆனால் அவருடைய மகனான நாயகன் விஜயகுமார்,தேர்தலில் நின்று வென்று காட்ட நினைக்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உயிரழப்பு வரை போகிறது. அவற்றைத் தாண்டி அவர் வென்றாரா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

நாயகன் விஜயகுமார், இது திரைப்படம் அதில் நாம் நடிக்கிறோம் என்றில்லாமல் வேலூர் மாவட்ட கிராமத்து இளைஞராகவே மாறியிருக்கிறார்.அப்பாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மறுகுவதும் உரியதைப் பெறவேண்டும் என்கிற உரிமை வேட்கையை வெளிப்படுத்துவதும் மட்டுமின்றி காதல்,குடும்பம் ஆகியனவற்றைக் கலந்த உணர்வுப் பூர்வமான இளைஞராக மிளீர்கிறார்.

நாயகி பிரீத்தி அஸ்ராணிக்கு ஏனோதானோவென்று வந்துபோகிற வேடமில்லை.முக்கியமான வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

உண்மையான அரசியல் தொண்டராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கும் வகை.பின்னணி இசையில் கதைக்களத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறார்.

மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவில் வேலூரே வேறமாறி தெரிகிறது.கதையில் இருக்கும் அழுத்தத்தைக் காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

வழக்கமான படமாக இல்லாமல் மாறுபட்டுத் தெரிய வேண்டும் என்று வேலை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார்.

அழகியபெரியவனின் வசனங்கள் இயக்குநரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

எழுதி இயக்கியிருக்கும் தமிழ், அர்சியலை மேம்போக்காகப் பார்க்காமல் எட்டுக்கோணங்களிலும் பார்த்திருக்கிறார்.அதை மக்களுக்கும் கடத்தியிருக்கிறார்.

அரசியல் என்றால் நேரா முதலமைச்சர் பதவி ஏற்பதுதான் என்று நினைப்பவர்களுக்கு இப்படம் சரியான பாடம்.

– கதிரோன்

Related Posts