கமல் ரஜினிக்கு ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் வேண்டுகோள்
படங்களைத் திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.
இதனால், இந்த மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த சுமார் 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
மார்ச் 16-ந் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகளும் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமலுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாகத் தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.
நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை.
இவ்வாறு கூறியிருக்கிறார்.











