October 17, 2026
சினிமா செய்திகள்

படைப்பாளியா? வியாபாரியா? – இயக்குநர் விஜய்சந்தருடன் ஓர் உரையாடல்

சிம்பு ஹன்சிகா நடிப்பில் வாலு, விக்ரம் தமன்னா நடித்த ஸ்கெட்ச், விஜயசேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கார்டியன். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் அந்தப்படம் நாளை (மார்ச் 8) வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் விஜய்சந்தருடன் ஓர் உரையாடல்.

1.தயாரிப்பாளரானது எப்படி?

சங்கத்தமிழன் படத்துக்கு அடுத்து வேறொரு படம் இயக்கும் முயற்சியில் இருந்த நேரத்தில் கொரோனா வந்துவிட்டது.இதனால் ஹீரோ தேதி கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டு சில காலம் காத்திருக்கவேண்டிய நிலை.அந்த நேரத்தில் எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் இணைந்து படத்தயாரிப்பில் இறங்கலாம் என்று அழைத்தனர். அதனால் அவர்களோடு இணைந்து படம் தயாரிக்க முடிவு செய்தேன்.

2.முதல் தயாரிப்பாக கார்டியன் அமைந்தது பற்றி..?

படம் தயாரிப்பது என்று முடிவானதும் முதல்படமாக ஹாரர் த்ரில்லர் படம் உருவாக்குவோம் என்று எல்லோரும் முடிவெடுத்தோம்.அப்போது இந்தக்கதை கேட்டோம்.பிடித்திருந்தது.கதைக்குப் பொருத்தமாக ஹன்சிகாவும் அமைந்தார். படம் உருவாகிவிட்டது.

3.இயக்குநராக இருந்தபோது தயாரிப்பாளர்கள் குறித்து உங்களுக்கு ஒரு பார்வை இருந்திருக்கும்.இப்போது எப்படி?

இயக்குநராகப் பணியாற்றும்போது நாம் கேட்ட விசயங்கள் கிடைக்காமல் போனால் வருத்தமாக இருக்கும். இந்தப்படம் எடுக்கும்போதே இதில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு அந்த எண்ணம் வந்துவிடக்கூடாது என்று நினைத்து அதற்கேற்பச் செயல்பட்டேன்.

4.அப்படிச் செய்யும்போது பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பார்களே?

திரைப்படம் என்பது படைப்பு. அது சரியாக இருந்தால்தான் மற்ற எல்லாம் சரியாகக் கிடைக்கும்.அதனால் அந்த படைப்புக்கான முழுமையான நியாயம் செய்யவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

5.படம் தாமதமானது ஏன்?

தாமதமெல்லாம் இல்லை. படத்தில் நிறைய சிஜி ஷாட்கள் இருக்கின்றன. பிற்பகுதியில் ஹன்சிகா வரும் காட்சிகள் பெரும்பாலும் சிஜி இணைந்த காட்சிகள்தாம். அவற்றை மிகச் சரியாகச் செய்ய உழைத்தோம். அதற்கே பல மாதங்கள் பிடித்தது.

6.படத்தை வியாபாரம் செய்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் இயக்கும் படங்களிலும் கூட வியாபார விசயங்களில் எனக்கென்ன? என்றிருக்கமாட்டேன். தொலைக்காட்சி ஒளிபரப்பு. இணைய ஒளிபரப்பு மற்றும் திரையரங்க வியாபாரம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்துகொள்வேன். அந்தப் பழக்கம் இந்தப்பட வியாபாரத்துக்குப் பலனாக இருந்தது.

7.ஒரு படைப்பாளி வியாபாரியாக இருக்கவியலாது என்பார்களே?

திரைப்படக்கலையைப் பொறுத்தவரை வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் படைப்புகளே தீர்மானிக்கப்படுகின்றன. இதை நான் இயக்கும் படங்களிலேயே நன்றாக உணர்ந்திருக்கிறேன்.எனவே படைப்பைத் திட்டமிடும் போதே வியாபாரக் கண்ணோட்டத்துடன் அணுகும் எண்ணம் எனக்கு உண்டு.அதனால் எல்லாம் எளிதாக இருந்தது.

8.தொடர்ந்து படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா?

இருக்கிறது. நான் மற்றும் என்னுடன் பயணிக்கும் நண்பர்கள் ஆகிய அனைவரும் தொடர்ந்து படங்கள் தயாரிப்பது என்று முடிவுசெய்திருக்கிறோம்.

9.நீங்கள் அடுத்து இயக்கும் படம் எப்போது.?

ஒரு பெரிய ஹீரோவை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் நான் இயக்கவிருக்கிறேன். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அந்தப்படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

– ஜிஜே

Related Posts