சினிமா செய்திகள்

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் – விவரங்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28,2023) காலை 6.10 மணிக்குக் காலமானார்.

அவரது மறைவையடுத்து சாலிகிராமத்திலுள்ள வீட்டில் அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டது.அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதன்பின் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், இரசிகர்களும், பொதுமக்களும், பல்வேறு பிரபலங்களும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக இன்று விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி எனப் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாகப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அங்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்,அளுநர் ஆர்.என்.இரவி உள்ளிட்ட பல அரசியல்தலைவர்களும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து விஜயகாந்த் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதிஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள கோயம்பேடு அலுவலகத்துக்குள் செல்ல 200 நபர்களுக்கு மட்டும் 4 நிறங்களில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டன. குறிப்பாக, விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அவை வழங்கப்பட்டன.

அங்கு, விஜயகாந்தின் உடல் சந்தனப்பெட்டியில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட சந்தனப்பெட்டியின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றுள்ளன.சந்தனப் பெட்டியின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.

மாலை ஆறுமணியளவில்,24 காவல்துறையினர் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
72 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதிமரியாதை செய்யப்பட்டது.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, டி.ஆர்.பாலு, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதன்பின், அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று குடும்ப முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தனர்.அனைத்தும் நிறைவடைந்த பின் 7 மணியளவில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Posts