சினிமா செய்திகள்

இரண்டாவது வாரமும் இவ்வளவு திரையரங்குகள் – சந்தோச சபாநாயகன்

அசோக் செல்வன் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் சபாநாயகன்.அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன்,சர்டிஃபைடு ராஸ்கல்ஸ் ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.

கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வெளியான நாள்முதல் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.

தொடக்கத்தில் 180 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாளில் பிரபாஸின் சலார் படமும் வெளியானது. ஆனால் அந்தப்படத்தை விட இந்தப்படம் நன்றாக இருக்கிறதென இரசிகர்களால் சொல்லப்பட்டது.

அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் அதிக இருக்கைகள் உள்ள பெரியதிரையரங்குகளில் சலார் படமும் அதேவளாகத்தில் சிறிய அரங்குகளில் சபாநாயகன் படமும் திரையிடப்பட்டது. சில நாட்களிலேயே தலைகீழ் மாற்றம். சபாநாயகன் பெரிய திரையரங்குகளுக்கு மாறிவிட்டது.

நேற்று முதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது இப்படம். இரண்டாவது வாரத்திலும் 150 திரையரங்குகள் அதுவும் எல்லா இடங்களிலும் பெரிய திரையரங்குகள் என்பதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இதனால், அசோக்செல்வனுக்கு இன்னுமொரு வெற்றிப்படம் என்று அவருடைய இரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.அதுமட்டுமின்றி, எடுத்த முதல்படமே வெற்றிப்படம் என்பதால் இயக்குநரும் தயாரித்த முதல்படம் வெற்றிப்படம் என்பதால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அசோக்செல்வன் திருமணத்துக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்ததில் அவர் மனைவி கீர்த்திபாண்டியனுக்கும் செம சந்தோசம்.

இப்படிப் பலதரப்பினரையும் இப்படம் மகிழ்வித்திருக்கிறது.

Related Posts