விஷாலின் ரத்னம் படத்துக்காக அமேசான் கொடுத்த விலை
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 ஆவது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
விவேகா பாடல்களை எழுதுகிறார்.
தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இணைய வெளியீட்டு உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, திரையரங்குகளில் வெளியான பின்பு இணையத்தில் ஒளிபரப்பும் உரிமை. இதை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, அமேசான் பிரைம் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது.
விஷால் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியானது.
அதன்விலை எவ்வளவு?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் சேர்த்து சுமார் பதினெட்டுகோடி என்று சொல்லப்படுகிறது.
இது தென்னிந்திய மொழிகள் இணைய ஒளிபரப்பு மட்டுமே.இதுதவிர இந்தி தனியாக விற்ப்னை செய்யப்படும்.
இவற்றைத்தாண்டி எல்லா மொழிகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை இருக்கிறது. அவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.
எல்லாம் சேர்ந்தால் மிகப்பெரிய தொகை வரும். அதனால் படம் வெளியீட்டுக்கு முன்பே பொருளாதாரப் பாதுகாப்பு பெற்றிருக்கிறது என்கிறார்கள்.











