வெளியீட்டுக்கு முன்பே இலாபம் – பார்க்கிங் பட ஆச்சரியம்
அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங்.
இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதுபோன்ற படங்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றால் மட்டுமே இலாபத்தை ஈட்டும் என்பார்கள்.
ஆனால், திரையுலகினர் வியப்படையும் வண்ணம் இந்தப்படம் வெளியீட்டுக்கு முன்பே இலாபம் ஈட்டியிருக்கிறதாம்.
எப்படி?
சில பெரியமுதலீட்டுப்படங்கள், பெரிய கதாநாயகர்கள் படங்கள் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களே வியாபாரமாகாமல் தடுமாறும் நிலையில், இந்தப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆகிவிட்டதாம். அதன்விலை சுமார் ஏழரை கோடி என்று சொல்லப்படுகிறது.
இதுவே வியப்பென்றால் இதைவிடப் பெரிய வியப்பாக தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையும் சுமார் மூன்று கோடிக்கு எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்பனை ஆகிவிட்டதாம்.
சிறியமுதலீட்டுப் படங்கள் வெளியீட்டுக்கு முன்பே நல்லபெயர் பெறுவதோடு பொருளாதார ரீதியாகவும் பலனடைவது பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய செய்தி.
இதனால் நாயகன் ஹரீஷ்கல்யாண், நாயகி இந்துஜா மற்றும் இயக்குநர் இராம்குமார்பாலகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.படம் வெளியான பின்பு இரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.











