விமர்சனம்

கபில் ரிட்டர்ன்ஸ் – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, தந்தை மகன் பாசத்தை உறுதுணையாகக் கொண்டு சாதனை செய்ய வயது தடையில்லை எனும் கருத்தைச் சொல்லியிருக்கும் படம் கபில்ரிட்டர்ன்ஸ்.

கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காத அப்பா,அவருடைய மகனுக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம்.முதலில் எதிர்த்து பிறகு ஒப்புக்கொள்கிறார் அப்பா.அதன்பின் மகன் விளையாடப் போன இடத்தில் அவனுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க அவரே களமிறங்குகிறார். இறுதியில் என்ன நடக்கிறது?

கதையின் நாயகனான அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீனி செளந்தரராஜன். அவரே இயக்கம் அவரே தயாரிப்பு என்பதால் சர்வசுதந்திரத்துடன் நினைத்ததைச் செய்திருக்கிறார்.அதேநேரம், தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேடத்தை வடிவமைத்து அதற்குத்தக நடித்து படத்தைப் படமாக ஆக்கியிருக்கிறார்.

அவருடைய மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஜான் பொருத்தமான தேர்வு.அதனால் காட்சிகளில் சுவாரசியம். சிறுவயது ஸ்ரீனிசெளந்தரராஜனாக நடித்திருக்கும் சிறுவன் பரத்தும் தாழ்வில்லை.

நாயகனின் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் நிமிஷா, இப்படி ஒரு மனைவி எல்லோருக்கும் அமைந்தால் நல்லது என்று எண்ணும்படியான வேடத்தை நிறைவாகச் செய்து பாராட்டுப் பெறுகிறார்.

ரியாஸ்கான், வையாபுரி, பருத்திவீரன் சரவணன், சிறுமி வர்ஷா ஆகியோரும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஷியாம்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்து பட ஓட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறது.

ஆர்.எஸ்.பிரதாப்ராஜ் இசையில் பாடல்களில் நற்கருத்துகள் நிரம்பி கேட்கும்படி இருக்கின்றன.பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை என்பது நிறைவு.

விரல்நீட்டி மக்களைப் பார்த்துப் பேசாமல் நல்ல கருத்துகளைப் பகிர்ந்துள்ள அதேநேரம், பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய படமாக அமைந்திருப்பது அனைவரையும் இரசிக்க வைக்கும். எல்லாப் புகழும் ஸ்ரீனிசெளந்தரராஜனுக்கே.

– குமரன்

Related Posts