லியோ படத்திலும் அப்பாவைத் திட்டும் விஜய் – விவரம்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகத் தகவல்கள் வந்தன.லியோ, பார்த்திபன் எனப்படும் இரு வேடங்களில் லியோ என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை த்ரிஷாவும், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை பிரியா ஆனந்த்தும் இணையராக நடித்து வருவதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், அது இரட்டை வேடங்கள் இல்லை, ஒரு விஜய்யே இருபத்தைந்து வயது மற்றும் நாற்பத்தைந்து வயது கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்கிறார்கள்.
அதோடு, இந்தப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக அர்ஜுனும் விஜய்க்கு அப்பாவாக சஞ்சய்தத்தும் நடித்திருக்கிறார்களாம்.
விஜய் கதாநாயகன் சஞ்சய்தத் வில்லன் எனும் போது கதைப்படி இருவரும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதால் இது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையாகத் தெரிகிறது.அப்பா மகன் சண்டைக்குக் காரணம் ஒரு பொதுச்சிக்கல் என்று இருக்கிறதாம்.
லியோவுக்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. அந்தப்படத்திலும் அப்பா மகன் இடையேயான பாசப்போராட்டம் கதைக்களமாக அமைந்திருந்தது.
அதற்கடுத்து வரவிருக்கும் லியோ படத்திலும் அப்படியே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இதனால், உண்மையிலேயே விஜய்க்கும் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வரும் வேளையில் விஜய் இம்மாதிரியான கதையாகத் தேர்ந்தெடுத்து நடிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு விடையாக, உண்மையில் அப்பா மீதான கோபத்தை வெளிப்படுத்த இம்மாதிரிக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் அப்பா கதாபாத்திரத்தைத் திட்டுவது போல் வசனங்கள் வைக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இன்னொருபக்கம், ஒவ்வொரு படத்தையும் வெற்றி பெற வைக்க படத்துக்குள் இருக்கும் கதை, கதாபாத்திரங்கள் ஆகியனவற்றைத் தாண்டி வெளியில் இருக்கும் விசயங்களைப் போல் படத்துக்குள் செய்திகளை வைத்து படத்தைக் கவனிக்க வைக்க வேண்டியிருக்கிறது என்பதால் அப்பா மகன் மோதலைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.











