சிறுவன் சாமுவேல் – திரைப்பட விமர்சனம்
சாம் என்கிற வேடத்தில் நடித்திருக்கும்
அஜிதன் தவசிமுத்து எனும் சிறுவன், ராஜேஷ் என்கிற வேடத்தில் நடித்திருக்கும்
கே.ஜி.விஷ்ணு ஆகிய இரண்டு சிறுவர்களை முதன்மையாக வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப்படம் எடுப்பது என்கிற முடிவுக்கு ஒரு விழுக்காடு வரவேற்பு கூட இருந்திருக்காது.
ஆனால், இயக்குநர் சாது ஃபெர்லிங்டனின் தன்பம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக அது படமாக உருவாகி பார்த்தோர் அனைவரும் வியந்து பேசும் படமாக மாற்றியிருக்கிறது.
அஜிதன் தவசிமுத்து கே.ஜி.விஷ்ணு ஆகிய இருவரும் தேர்ந்த நடிகர்கள் போல் பாத்திரமுணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது படத்தின் ஆகப்பெரும் பலம்.
நெல்சனாக நடித்திருக்கும்
எஸ்.செல்லப்பன், ஜெபாவாக நடித்திருக்கும்
எஸ்.பி.அபர்ணா, வேல்முருகனாக நடித்திருக்கும் எம்.ஏ.மெர்சின், சோபனாக நடித்திருக்கும் ஜெ.ஜெனிஸ் ஆகியோரும் இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.
வ.சிவானந் காந்தியின் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி மாவட்ட கிராமமொன்றின் அமைதியான அழகு சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே.ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காட்சிகளின் உணர்வை பின்னணி இசை பிரதிபலிக்கிறது.
கதைக்களமாக கன்னியாகுமரி மாவட்ட கிராமம், ஒரு நல்ல மட்டைப்பந்து வாங்க வேண்டுமென்ற ஏழைச்சிறுவர்களின் ஆசை என்கிற ஒரு வரிக்கதை, இதற்கு முன் ஒளிப்பதிவுக்கருவியைப் பார்த்திராத சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள், இவற்றோடு கொஞ்சும் குமரித்தமிழ் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு ஓர் அருமையான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாது ஃபெர்லிங்டன்.
காலணிக்காகப் போராடும் சிறுவர்களைக் கொண்ட உலகப்பெரும்புகழ் பெற்ற படத்தோடு இந்தப் படத்தை ஒப்பிட்டுப் பேச வைத்திருப்பது இயக்குநரின் வெற்றி.
– குமார்











