சினிமா செய்திகள்

வெற்றிமாறன் கருத்து – கமல் ஆதரவு

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

இதனிடையே இப்படத்தில் தமிழ்மன்னர் இராஜராஜசோழனை இந்து என்று குறிப்பிட்டது குறித்து அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது.

திரைத்துறையை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது, இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று (அக்டோபர் 5) பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன்,

இராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அவற்றை 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தைப் புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலைத் திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களைக் கொண்டாடுவோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாகக் கமல் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Related Posts