சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தின் வியாபாரம் – வியப்பில் திரையுலகம்

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார்.

66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன.

விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.

அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் 67 படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள் எனவும் அவர்களில் ஒருவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.

அடுத்து இந்தி நடிகர் சஞ்சய்தத்தும் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவ்விருவர் தவிர மூன்றாமவராக இருப்பவர் இயக்குநர் கெளதம்மேனன் என்று சொல்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஆச்சரியமூட்டும் அளவில் இந்தப்படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாம்.

இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமைக்காக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 120 கோடி தரத்தயார் எனச் சொல்லியிருக்கிறதாம். அதேபோல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் எண்பதுகோடி தர முன்வந்திருக்கிறதாம் சன் தொலைக்காட்சி.

அதோடு இப்படத்தின் இந்தி உரிமை விலை சுமார் ஐம்பது கோடி என்றும் அவ்வளவு தொகை கொடுத்து வாங்கவும் சிலர் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திரையுலகில் உலவும் இந்தத் தகவல்களால் பலரும் வியப்பின் உச்சியில் இருக்கிறார்கள்.

Related Posts