விமர்சனம்

கணம் – திரைப்பட விமர்சனம்

கணம் அம்மா பாசத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம்.

இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில் காலம் கடக்கும் எந்திரத்துடன் வரும் நாசர், நீங்கள் கடந்த காலத்துக்குச் சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் என்கிறார்.

அதை ஏற்றுக்கொண்டு,தன் சிறுவயதில் நடந்த அம்மாவின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் ஷர்வானந்த்.அது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது கணம்.

டைம் மெஷின் வைத்து எத்தனை கதைகள் பண்ண முடியுமோ தெரியாது ஆனால் அம்மா
சென்டிமெண்டில் வைத்து ஆயிரம் கதைகள் பண்ணிக் கொண்டே இருக்கலாம்.

ஷர்வானந்த் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார்.பள்ளிப்பருவத்தில் இழந்த தன் அம்மாவை டைம் மெஷின் மூலம் திரும்பப் பார்க்கும் காட்சிகள் நெகிழ்ச்சி.அம்மாவை மீண்டும் இழந்து விடுவோமோ என்று தவிக்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் அமலா, ஓர் உண்மையான அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.உருவத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும் அவருடைய அடையாளமான புன்சிரிப்பு மாறவேயில்லை.

நாயகி ரீத்துவர்மாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும் அவர் வருகிற காட்சிகள் பலமானவை.

நாயகனின் நண்பர்களாக வரும் சதீஷ், ரமேஷ்திலக் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைத்து படம் இலகுவாக நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.

விஞ்ஞானியாக நடித்திருக்கும் நாசர், அமலாவின் கணவராக வரும் ரவிராகவேந்தர் ஆகியோர் கவனிக்கவைத்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜோயின் இசையில்,’ஒருமுறை என்ன பாரம்மா’ பாடல்,அம்மா மகன் பாசத்தைக் காட்ட காட்சிகள் இல்லை என்கிற குறை தெரியாமல் நிறைவு செய்கிறது.பின்னணி இசை.காட்சிகள் வெளிக்காட்டும் உணர்வுகளுக்குப் பலம் சேர்க்கிறது.

சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு, தற்போதைய காலகட்டம் முற்காலம் ஆகியனவற்றை வேறுபடுத்திக்காட்டி படம் குழப்பமில்லாமல் நகர உதவியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகார்த்திக், எல்லோருக்கும் பொதுவான அம்மா பாசத்தைக் கையிலெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

வெளியே வரும் பொழுது கணம் மிகப்பெரிய கனத்தை ஏற்படுத்துகிறது மனதளவில்.

– முத்து இரத்தின சக்திவேல்

Related Posts