விமர்சனம்

விருமன் – திரைப்பட விமர்சனம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை.

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார்.

இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்புத் தொழிலை முருகனே செய்தார்.

பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால்,சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார்.

இதைப் பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா – வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா – உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

என கவியரசு கண்ணதாசன் இதுகுறித்துப் பாடல் புனைந்துள்ளார்.

அவற்றை நினைவுறுத்தும் வகையில் பெற்ற அப்பாவுக்கு நல்லபாடம் சொல்லும் மகன் எனும் ஒற்றைவரிக் கதையின் மண்மணக்கும் திரைக்கதையே விருமன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்துக் கதையில் கார்த்தி. கறுப்புக்கண்ணாடி மஞ்சள்சட்டை, வெள்ளைவேட்டியில் அறிமுகமாகும் காட்சியிலிருந்து, உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்ப்பா என்று கலங்கிக் கண்ணீர்விடும் கடைசிக்காட்சி வரை அதகளம் செய்திருக்கிறார்.

வருடத்துக்கு ஒருபடமாவது இப்படி நடிச்சுடுங்க கார்த்தி.

நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி. அவர் அறிமுக நாயகி என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு அனுபவ நாயகியாக எல்லாக் காட்சிகளையும் இரசித்து நடித்திருக்கிறார். இரண்டு பாடல்கள் மற்றும் இடைவேளைக்குப் பின் தொடங்கும் காட்சி ஆகியனவற்றில் அவருடைய நடனம் ஆச்சரியப்பட வைக்கிறது.

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ், அம்மாவாக சரண்யாபொன்வண்ணன், மாமாவாக ராஜ்கிரண், கருணாஸ் மற்றும் இளவரசு ஆகியோர் அவரவர் வேடத்தைச் சிறப்பாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கார்த்தியுடனே படம் முழுதும் பயணிக்கும் சூரியும் பிரகாஷ்ராஜுடன் படம் நெடுக வரும் சிங்கம்புலியும் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.

வசுமித்ர, மனோஜ்பாரதிராஜா,ராஜ்குமார் ஆகியோர் கார்த்தியின் சகோதரர்களாகவும், அருந்ததி, மைனா ஆகியோர் கார்த்தியின் அண்ணிகளாகவும் வடிவுக்கரசி கார்த்தியின் பாட்டியாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.கே.சுரேஷுக்கு வில்லன் வேடம்.

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் கிராமங்களின் அழகும் நடிகர்களின் மெருகும் கூடியிருக்கின்றன. 

யுவனின் இசையில் பாடல்கள் துள்ளல் இரகம். ஆட்டம் போட வைக்கின்றன. கஞ்சாப்பூ கண்ணாலே பாடல் வரிகள் ஈர்க்கின்றன. பின்னணி இசையிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார் யுவன்.

அழிந்து கொண்டிருக்கும் கிராமத்து வாழ்வியல்களைக் காட்சிப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் இயக்குநர் முத்தையா, இப்படத்திலும் அதைச் செய்யத் தவறவில்லை. 

அவற்றைக் காட்சிப்படுத்த, சொல்லும் கதையும் கதை மாந்தர்களும் தமிழ்த் திரைகளில் பலமுறை தோன்றியவர்கள் என்பது பலவீனம்.

அதைத்தாண்டி, கார்த்தியின் வீரம், அதிதியின் அழகு, சூரி, சிங்கம்புலி ஆகியோரின் நகைச்சுவை, அட்டகாசமான சண்டைக்காட்சிகள் ஆகியனவற்றோடு அன்புக்காகவும் பாசத்துக்காகவும் ஏங்கும் மனிதர்களையும் அவற்றை அள்ளிக் கொடுக்கும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

Related Posts