வதந்திகளைப் பொய்யாக்கிய கோப்ரா படக்குழு – இரசிகர்கள் மகிழ்ச்சி
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார்.உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடையாததால் அந்தத் தேதியில் படம் வெளியாகவில்லை.
அதற்கு மாறாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அந்தத் தேதிக்குள்ளும் படம் தயாராகாது. எனவே ஆகஸ்ட் 32 அன்று படம் வெளியாகாது என்கிற செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
அவற்றைப் பொய்யாக்கும் விதமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி, கோப்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளீல் உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இவ்வறிவிப்பை விக்ரம் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகிறார்கள்.











