பிக்பாஸ் அல்டிமேட் கமல் விலகலுக்குக் காரணம் நூறுகோடி – ஆச்சரிய தகவல்
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, ஜுலி, தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப், உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்…..
ஊரடங்கு விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நெருங்கி வரும் சூழலில், என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.
ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் பிப்ரவரி 20 ஆம் தேதி எபிசோட்டுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில், பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு, இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கமலின் இந்த தற்காலிக விலகலுக்கு முக்கிய காரணம் இருக்கிறதாம்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஒளிபரப்பிவருகிற ஹாட்ஸ்டார் தளம்தான், கமல் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் இணைய வெளீயீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கிறதாம்.
அதற்காக அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை நூறு கோடி என்று சொல்லப்படுகிறது.
இவ்வளவு பெரிய தொகை பெற்று படத்தின் உரிமையைக் கொடுத்திருப்பதால், குறிப்பிட்ட தேதிக்குள் விக்ரம் படத்தை ஹாட்ஸ்டாருக்குக் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஹாட்ஸ்டார் நிறுவனமே பிக்பாஸ் நிகழ்ச்சியா? விக்ரம் படமா? என்றால் விக்ரம் படம்தான் முக்கியம் அதை முதலில் முடித்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டதாம்.அதோடு அத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விடுங்கள் என்று சொன்னதாம்.
அதனால்தான், கமல் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்று சொல்கிறார்கள்.











