Uncategorized

விஜய்யின் புலி படத்தில் இடம்பெறாத பாடலில் இவ்வளவு இருக்கா? – ஓர் இரசிகரின் பதிவு

விஜய் படங்களில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது ‘புலி’. படத்தில் பெரியளவில் இரசிக்கும் வகையில் ஒன்றும் இருக்காது. (நான் விஜய் ரசிகன் என்பதால் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதுமாக உட்காந்து பார்ப்பேன் என்பது வேறுகதை) ஆனால், வைரமுத்து வரிகளில் ‘மனிதா…மனிதா….தன்மான மனிதா’ எனும் பாடல் மட்டும் எப்போது கேட்டாலும் உணர்வுபூர்வமானதாக இருக்கும்.

இந்தப்படத்தின் அத்தனைப் பாடல்களையுமே வைரமுத்துதான் எழுதியிருக்கிறார். முதலில், வைரமுத்து எழுதுகிறார் என்றவுடன் விஜய் இரசிகராக எனக்கு அதிருப்தியே ஏற்பட்டது. கபிலன், மதன் கார்க்கி மாதிரியான அடுத்த தலைமுறை ஆட்களை எழுத வைத்திருக்கலாமே அதுதானே ட்ரெண்ட்டுக்கேற்றவாறு இருக்கும் என யோசித்திருக்கிறேன்.

ஆனால், இந்த மனிதா…மனிதா பாடலைக் கேட்டவுடன் அந்த அதிருப்தியெல்லாம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பாடலை வேறு யாரால் எழுதிவிட முடியும்? படத்தின் பெயர் ‘புலி’ என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்தப்பாடலைக் கேட்டால், இது எந்த மக்களை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பது புரிந்து கூடுதல் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தும்.

ஆனால், இந்த வரிகளை ஒரு இனக்குழுவுக்கானதாகவும் சுருக்கிவிட முடியாது. சமதர்மம் குலைந்து ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் இந்த பாடலுக்கான வெளி உருவாக்கப்படுவதாகவே உணர்கிறேன்.

தேவி ஸ்ரீ பிரசாத் வழக்கம்போல கையில் கிடைத்ததை வைத்து ஒப்பேற்றியிருப்பார். பாட்டு முழுக்க ஒரே ஒரு பீட் தான்…ஒரே ஒரு கோரஸ்தான். ஆனால், இந்த பாட்டுக்கு அதுதான் அழகாகவும் பொருந்திப் போகிறது.

இரசிக்கிற மாதிரி ஒரு காட்சியைக் கூட வைத்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்திலிருந்து இந்தப்பாடலைத் தூக்கிவிட்டார்கள். (சென்சார் கட் கொடுக்கப்பட்டதா…இல்லை படக்குழுவே நீக்கிவிட்டதா என்று தெரியவில்லை) இந்தப்பாடலின் கோரஸ் மட்டுமே விஜய்க்குப் பிண்ணனி இசையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

படமும் தோல்வி. மேலும், படத்திலிருந்து இந்தப்பாட்டும் வெட்டப்பட்டதால் பெரிதாக ரீச் இல்லாமல் இருக்கிறது.

இப்படியொரு படத்தைக் கொடுத்ததற்காக சிம்புதேவன் எதுவும் பரிகாரம் செய்ய நினைத்தால் இந்தப்பாடலின் வீடியோ வடிவத்தை வெளியிடலாம்.

கூட்டுப்
பறவைகளாய் இந்தக்
காட்டில் பிறந்தோம் கை
வீசி திரிந்தோம்

சிந்தும்
வேர்வையினால் நவ
தானியம் விளைந்தது
நம்மாலே

பட்டாம்
பூச்சிகளாய் இங்கு
பறந்தோம் திரிந்தோம்
ஒன்னாக வளர்ந்தோம்

வஞ்சகர்
சூழ்ச்சியிலே நம்
வாழ்க்கை தேய்ந்தது
பின்னாலே

உடையட்டும்
உடையட்டும் விலங்குகள்
உடையட்டும் முடிவெடு
தமிழ் இனமே!

– விஜே.ஶ்ரீராம்

Related Posts