ராங்கி படப்பாடல் உருவானது எப்படி? – கபிலன் பகிரும் சுவாரசிய தகவல்
எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ராங்கி.
லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கியிருக்கிறது.
முதற்கட்டமாக அப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடல் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
சி.சத்யா இசையில் கபிலன் எழுதியிருக்கும் அந்தப்பாடலை சின்மயி பாடியிருக்கிறார்.
பனித்துளி விழுவதால்… எனத் தொடங்கும் அந்தப் பாடல் குறித்து பாடலாசிரியர் கபிலனிடம் பேசியபோது…..
இப்பாடலுக்காக இயக்குநர் சரவணன் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரோடு அமர்ந்த போது, பாடல் இடம் பெறும் சூழ்நிலையை இயக்குநர் விளக்கினார்.
இந்தப்பாடலுக்கான சூழல் மிகவும் ஆழமானது. இயக்குநர் சூழலைச் சொன்னதும் பாடல் வரிகள் உதித்தன.
அவற்றை எழுதிவிட்டேன். மெட்டுக்கேற்ப எழுதாமல் நான் எழுதிய பின்பு அதற்கு இசையமைத்தார் இசையமைப்பாளர் சி.சத்யா.வரிகளுக்கு மெட்டமைக்கும் பக்குவம் பெற்றிருக்கும் அவர் தன் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார்.
இந்தப் பாடல் முழுமையாக வெளிவரும்போது நல்ல வரவேற்பும் வெற்றியும் பெறும் என்பதில் ஐயமில்லை என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் கபிலன்.
ஏற்கெனவே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஐ படத்தில் இடம்பெற்ற என்னோடு நீயிருந்தால்…, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆதவன் படத்தில் இடம்பெற்ற வாராயோ வாராயோ காதல் சொல்ல… ஆகிய வெற்றிப் பாடல்களைப் பாடியவர் சின்மயி. அப்பாடல்களை எழுதியவர் கபிலன்.
அவற்றைப் போல இந்தப் பாடலும் பெரிதாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை பொய்க்காது.











