வா வாத்தியார் – திரைப்பட விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.அவர் திரைப்பட நடிகராக இருந்தபோது அவருடைய இரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள்.அதனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தக்கதைக்கு வா வாத்தியார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் எம்ஜிஆரின் தீவிர இரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறக்கும்போது பிறந்த தன் பேரன் கார்த்தியை, எம்ஜிஆரின் மறுபிறப்பு என்றெண்ணி அவரைப் போலவே வளர்க்கிறார்.வளரும் நேரத்தில் கார்த்தி எதிர்மறை எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு வழிமாறிப்போகிறார்.அதையறிந்த தாத்தா உயிரை விடுகிறார்.அதன்பின் கார்த்தியின் போக்கிலும் மாற்றம் ஏற்படுகிறது.மீண்டும் வாத்தியாரான அவர் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தேவையான அளவில் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
ஒரேநேரத்தில் நல்லவராகவும் கெட்டவராகவும் நடிக்க வேண்டிய வேடம் கார்த்திக்கு அமைந்திருக்கிறது.அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆரின் மறுபிறப்பு போல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.நடை உடை பாவனைகளில் அவரைப் பிரதியெடுத்தது போலவே இருக்கிறார்.எம்ஜிஆர் நடித்த பாடலில் அவரை விட சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கீர்த்திஷெட்டி கவர்ச்சிகாட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.கதையில் அவருக்குப் பங்கே இல்லை என்று சொல்லமுடியாத வண்ணம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.அவருக்கு இந்த வேடம் அல்வா சாப்பிடுவது போல.கொடுத்த வேலையைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்.
நாயகனின் தாத்தா பூமிப்பிச்சையாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார்.அவருடைய வேடம் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.அவர் இயல்பாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
நிழல்கள் ரவி,ஆனந்தராஜ்,ஜி.எம்.சுந்தர்,கருணாகரன்,ஷில்பா மஞ்சுநாத்,ரமேஷ் திலக்,வித்யா,பி.எல்.தேனப்பன்,யார் கண்ணன்,நிவாஸ் ஆதித்தன் என படத்தில் நிறைய நடிகர்கள்.அனைவரையும் தேவையான அளவு நடிக்க வைத்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில்,கால் நூற்றாண்டுக்கு முந்தைய வண்ணப் பகிர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
சந்தோஷ்நாராயணன் இசை மூலம் படத்தின் தரத்தை உயர்த்த துணை நின்றிருக்கிறார்.
கிரணின் கலை இயக்கம்,அன்றைய காலகட்டத்தைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறது.
அனலரசுவின் சண்டை வடிவமைப்புகள் சுவாரசியம்.பெண்களை அடிக்கமாட்டேன் என்கிற நாயகனின் கொள்கைக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நன்று.
வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு முதல்பாதியில் சரி.இரண்டாம் பாதியில் பிழை.
எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, எம்ஜிஆரின் பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பாணியில் படத்தைக் கொடுத்திருக்கிறார்.முதலமைச்சர், அரசியல் தரகர், மஞ்சள்முகம் குழு உட்பட பல காரமான விசயங்களை கதைக்குள் வைத்திருக்கிறார்.படத்தின் இறுதியில் குறை இருக்கிறது.கார்த்தியும் எம்ஜிஆரும் ஒருவரையொருவர் சந்திக்கும் காட்சி போல் சில காட்சிகள் இப்படத்தின் தனித்துவம்.
– கதிரோன்











