October 25, 2025
Uncategorized கட்டுரைகள்

நிகழ்த்துகிறேன்’ என்றால் அதிகாரத்திற்கு உட்படுத்துகிறேன் என்று பொருள் – அலிஜான்ட்ரோ ஜோடோர்வஸ்கி

அலிஜான்ட்ரோ ஜோடோர்வஸ்கி ஓர் உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்.ராஜாதிராஜா, மன்னர் மன்னன் எனும் பொருளில் இயக்குநர்களுக்கெல்லாம் இயக்குநர் என்கிற பெயர் பெற்றவர். திரைப்படத் தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், நடிகர், எழுத்தாளர், கவிஞர், இசைக்கலைஞர் மற்றும் காமிக்ஸ் எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

பிப்ரவரி 17, 1929 அன்று சிலியின் டோகோபில்லாவில் பிறந்தவர். இவருடைய 97 ஆவது பிறந்தநாள் இன்று.அதையொட்டி அவருடைய நேர்காணல் ஒன்று…..

கோணிப் பைகளுக்குள் திணிக்கப்பட முடியாதவர் அவர். பாவைக் கூத்தில் தொடங்கி, ஊமைக் கூத்துக்கு மாறி, மேடை நாடகத்தில் நடிப்பையும் இயக்கத்தையும் மேற்கொண்டார். பாரிஸில் டோபர் (Topor) மற்றும் ஹரபால் (Arrabal) ஆகியோருடன் இணைந்து ‘பேனிக் நாடக இயக்க’த்தை (Panic Theater Movement)த் துவக்கினார். திரைப்படம் இயக்குவதை மேற்கொண்டு ஃபேண்டோ மற்றும் லீஸ் (Fando & Lis – 1967)), த மோல் (The mole – 1970)), த சேக்ரட் மௌண்டன் (The Sacred Mountain – 1974)), சானீடா சாங்கர் (Santa Sangre – 1984)) போன்ற கமுக்கத் திரைப்படங்களையும், கலாச்சாரத் திரைப்படங்களையும், அவ்வளவாக அறியப்படாத டஸ்க் (Tusk – 1980)), தரெயன்போ தீஃப் (The Rainbow Thief – 1990)) போன்ற திரைப்படங்களையும் படைத்தார். ஃபேரங்க் ஹேல்பட் (Frank Herbett) ன் நாவலாகிய ‘டுன்’ (Dune) னின் திரைப்பட்ட ஆக்கத்தையும் மேற்கொண்டார்.

சித்திரக் கதைகளையும் எழுதியிருக்கிறார். (இவற்றுள் நன்கறியப்பட்டது ‘இன்கால் (The Incal)’; மென்பியாஸ்ஸின் (Moebius) சித்திரத்தில் வெளியிடப்பட்டது). வேர் எ பேர்ட் சிங்க்ஸ் பெஸ்ட் (Where a Bird sings Best 1994), த பிளாக் தர்ஸ்டே ச்சைல்ட் (The Black Thursday Child 1999) த டேன்ஸ் ஆஃப் ரியாலிட்டி (The Dance of Reality (2001) போன்ற நாவல்களையும், கவிதைகளையும் எழுதினார். வாழ்வில் ஏற்பட்டதொரு முக்கியமான நெருக்கடியைத் தொடர்ந்து தனது படைப்பாற்றலை, புனைவுக்குள்ளிருந்து வெளிக்கொணர்ந்து, ‘குணமாக்கும் கலை’க்கெனச் செலுத்தினார். இந்தப் புதிய படைப்பாக்கத்தினால் விளைந்தவைதான் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிற அவரது முறைகள்.

டாரலஜி (Tarology) : நாடி வருவோரின் அகச்சிக்கல்கள் மற்றும் புற நெருக்கடிகள் குறித்த தரிசனம் பெறுவதற்காக டாரட்டை, காவிய மரபின் வழியே குறியீட்டியல் வழியே அணுகுவது.

சைகோஜூனியாலஜி (Psycho genealogy) : முன்னோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதிப்பு எவ்வகையில் ஒருவரது வாழ்வின் நிகழ்வுப் போக்குகளை மாற்றுகிறது எனத் தொகுத்தல்.

சைகோ மேஜிக் (Psycho Magic) : கவிதை, குறியீடு, காவியம் இவற்றின் கூட்டு லயத்தில் உயிர் விழிப்பைத் தூண்டிவிட்டு, நோய்க் குறிகளை ஏற்படுத்துகிற நெருக்கடிகளைச் சந்திக்கத் செய்தல்.

சைகோஷாமினிஸம் (Psychoshamnism) நாடிவருவோரை, சாமியாடுதலின் சடங்கொன்றில் பங்காற்றச் செய்து, அறுவை சிகிச்சை நிகழ்த்தி – குறியீட்டு முறையில்) அவரது பிரச்சினைகளிலிருந்து விடுதலையளித்தல்.

ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிற முறைகள் பற்றிய அவரது கட்டுரைகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கிறன : ‘சைகோ மாஜிக்’ (Psycho magic, 2004)), ‘த வே ஆஃப் த டேரட்’ (The way of the Tarot, 2004)).

பாரிஸில் வசித்து வருகிறார்.
•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
அலிஜான்றோ ஜோடோர்வஸ்கி உடல் நலம் இல்லாருந்த போதிலும், சிறியதொரு நேர்காணலை வழங்கினார். கைப்பிடியுள்ள இருக்கையில் தன்னைப் புதைத்துக்கொண்டு பார்வையை மேசை மேல் நிறுத்தி, மெல்லிய குரலில் விடையளித்தார்.

அனா கிரிபாஸ் : அலிஜான்ரோ … எப்படி இருக்கிறீர்கள்? உடல்நலனில் ஏதாவது சிக்கலா?

அலிஜான்ரோ : ஆம்

அனா : பேட்டி தரவேண்டாம் என்றிருக்கீறர்களா?

அலிஜான்ரோ : இப்போது, ஆரம்பிக்கப் போகிறீர்களா இல்லையா?

அனா : சரி சரி…. ஒரு கலைஞனின் கண்ணோட்டம், உங்கள் வாழ்வில் எப்படி இருக்கிறது என விளக்க முடியுமா?

அலிஜான்ரோ : எவ்வித அடையாளமும் எனக்குக் கிடையாது.என் வாழ்வில் நானொரு கலைஞனாகத் திரிவது கிடையாது.ஒரு மனிதனாக இருக்கிறேன்.அவ்வளவுதான்.கலைஞனின் கண்ணோட்டமெல்லாம் கிடையாது.ஒருவரைக் கலைஞனென்று அழைப்பது அவருக்கோர் அடையாளத்தைப் புனைவதாகும்.நானொரு கலைஞனல்ல.விளையாட்டு வீரனல்ல,அரசியல்வாதியல்ல, ஒரு ஞானவான் அல்ல, நான் ஏதுமற்றவன்; ஒரு மனிதன்.இப்படி வேணுமானால் சொல்லலாம்.

அனா : புரிகிறது. ஆனால் நீங்கள் மக்களுக்குக் கரம் நீட்டும் போது, நீங்கள் உயிர் விழிப்பை (Psycho magic) நிகழ்த்தும் போது, நீங்கள் டேரட் கார்டுகளின் (tarot cards) ஊடாக அவர்களின் ஆன்மிக குருவை அறிமுகப்படுத்தும்போது, யாராக இருக்கிறீர்கள்? எங்கு இருக்கிறீர்கள்?

அலிஜான்ரோ : நான் இருப்பதே கிடையாது;மற்றது இருக்கும்.மறைந்து போகிறது ‘நான்’.

அனா: நீங்கள் செயலற்று இருக்கும்போது, அல்லது உங்களூடாக மற்றது செயல்படும்போது, உங்களை நாடிவரும் ஒருவருடன் வேறொரு விழிப்பு நிலைக்குள் புகுவதாக உணர்கிறீர்களா?

அலிஜான்ரோ : பல முகங்கள் எனக்குக் கிடையாது.எல்லாத் தருணங்களிலும் ஒன்றாகவே இருக்கிறேன்.கழிப்பறைக்குச் சென்று எனை ‘இலகுவாக்கும்’ பொழுதிலும் ஒன்றாகவே இருக்கிறேன்.

அனா : ஆச்சரியமாக இருக்கிறது. . .ஆனால், உங்களின் ஊடாக மற்றதை எவ்வாறு செயல்படச் செய்கிறீர்கள்? அந்தச் செயல்பாட்டை எப்படி நிகழ்த்துகிறீர்கள்?

அலிஜான்ரோ : ‘நிகழ்த்துகிறேன்’ என்றால் ‘எனது அதிகாரத்திற்கு உட்படுத்துகிறேன்’ என்று பொருளாகிவிடும்.நான் எதையும் நிகழ்த்துவதில்லை.நான் எதையும் செய்வதுமில்லை.இப்படி வேண்டுமானால் இதைச் சொல்லலாம்.என்னை, செவிமடுக்கும் தொனியுடன் மாற்றிக் கொண்டு – கேட்கிறேன்.எனது தலையீடு துளியும் இல்லாமல் மற்றது இருக்கிறது.அல்லது உணரப்படுகிறது.

அனா : நீங்களே இல்லாமல் போகும்போது, எது உங்களிடம் செயல்படுகிறது?

அலிஜான்ரோ : எனது ஊடாக எது செயல்படுகிறது என்று விளக்க முடிந்தால் – புனித ஜானாகவோ, ராமகிருஷ்ணராகவோ, புத்தராகவே இருப்பேன்.எனது ஊடாக எது செயல்படுகிறது என்பதைப் பற்றி எனக்குத் துளியும் தெரியாது.ஏனெனில் அது சிந்தைக்கு அப்பாற்பட்டது.

அனா : ‘வேறு’ஒரு நிலையில் நீங்கள் இருக்கும்போது, ‘அது’ எப்படிப்பட்ட நிலை? நீங்கள் நீங்களாகவே உங்களுக்குள் இல்லாத நிலை எத்தகையது?

அலிஜான்ரோ : நீங்கள் ‘வேறு’ ஒரு நிலை என வகைப்படுத்துவது – ‘எதைக் காணவேண்டும்’ என்பது பற்றிய விழிப்பு நிலையாகும். ஆம், அது விழிப்பின் உச்சநிலை மட்டுந்தான்.

அனா : ‘மற்றதோடு லயத்தில் இருப்பது போல பாவனை செய்யவில்லை, கற்பனை நிலையாக இல்லை’ என எப்படி முடிவு செய்கிறீர்கள்?

அலிஜான்ரோ : முடிவல்ல, உறுதி! நீங்கள் உறுதி கொள்ளவில்லையெனில் எதையும் செய்யக்கூடாது.இதைப் போன்ற கேள்விகூட எனக்குள் எழுவதில்லை.சரியானதை மட்டுமே செய்கிறேன் என்பதில் முழு உறுதியாக இருக்கிறேன்.அப்படி இல்லையெனில், எதையும் செய்யமாட்டேன்.

அனா : நீங்கள் மக்களுக்குக் கரம் நீட்டுவதைச் செய்யாமல் இருக்க முடியுமா?

அலிஜான்ரோ : ஒரு மீன் எப்படி நீந்தாமல் இருக்க முடியும்…?

அனா : குருவாக உங்களை மக்கள் காணும்போது அல்லது அதைப்போன்ற நினைப்புகளை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

அலிஜான்ரோ : நான் எதையும் சமாளிப்பதில்லை.யாரோடு உறவில் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருப்பேன்.

அனா : மக்கள் கூட்டம் உங்களைத் தேடி வரும்போது, எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

அலிஜான்ரோ : லயம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்.

அனா : ஒரு ஞானியைப் போல அன்றாட வாழ்வில் இருப்பதற்கான சக்தியை வருவிப்பது, ஒரு பிரச்சினையும் இல்லாத மனிதர் போல இருப்பதற்கான குணமாக்கும் சக்தியைப் பெறுவது… இவை போன்ற, ‘போல இருத்தல்’களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

அலிஜான்ரோ :
போலச் செய்வதை பற்றி நான் பேசுகிறேன்.அது, செய்வதைக் கண்டு திரும்பச் செய்கிற குரங்குத் தனத்தைப் போன்றதல்ல. குரங்கோ, கிளியோ, நடத்தையை ஒற்றியெடுக்கின்றன.அவை, வடிவங்களை மட்டுமே ஒற்றியெடுக்கின்றன.ஆனால், ஒன்றனுக்கு உள்ளே எது இருக்கிறதோ அதைத் துய்த்துணர்ந்து ஒற்றியெடுப்பது என்பது முற்றிலும் வேறானது… சரிதானே? அப்படியாயின் இது, ‘உள்ளுள்ளதை’ மீண்டும் ஆக்குதல் ஆகும்.உள்ளுள்ளதை எப்பொழுது நீங்கள் போலச் செய்கிறீர்களோ அப்பொழுது, அங்கு உள்ளுள்ளதாக நீங்கள் உணர்ந்த ஒன்றை உங்களுக்குள் உள்ளதாக உணர்கிறீர்கள்; ஆம் .. நீங்கள் உணர்கிறீர்கள்! போலச்செய்தல் என்பது, அங்கு உள்ளுள்ளதை உங்களது உள்ளுள்ளதாக மறுபடைப்புச் செய்வது அல்லது ஆக்குவது ஆகும். அப்படியாக போலச் செய்யும்பொழுது, இந்த மனித உடலுக்குள் நீங்கள் ‘அதை’ உணரலாம்; அதாவது,’அதன்’ உள்ளுள்ளதை உணரலாம். ஆனால் அதை நீங்கள் சரியான அறிவு ஓட்டத்தின் வழியாக வழிப்படுத்தல் வேண்டும். இந்த வகையான போலச்செய்தலின் பொழுது, மெய்விழிப்பரின் நிலையை நீங்கள் துய்க்க முடியும்; இப்படியான போலச் செய்தலென்பது, நடத்தையை ஒற்றியெடுக்கிற குரங்குத்தனமல்ல.

அனா : பைத்தியம் என்றால் என்ன?

அலிஜான்ரோ : ஒரு பைத்தியக்காரன் புத்திசாலி.வேலை எதையும் செய்யக் கட்டுப்பட முடியாதவன்.

அனா : நோயாளி என்பவன்?

அலிஜான்ரோ : தனக்குத் தேவையான சிலது தடுக்கப்படுவதாலும், தான் விரும்பாத செயல்களைச் செய்ய வைக்கப்படுவதாலுமே ஒருவன் நோயாளி ஆகிறான்.

அனா : நோயிலிருந்தும், பைத்தியத்திலிருந்தும் கலை நம்மை எவ்வாறு விடுதலை செய்ய முடியும்?

அலிஜான்ரோ : கலையொரு புகைபோக்கி.மகிழுந்துவிலிருக்கும் புகைபோக்கி வழியாக நிகழ்வது போல, சக்திகள் வெளியேற்றப்படுவதற்குத் துணை நிற்கிறது.புகைப் போக்கிக்குள் சிலர் வடிகட்டிகளை அமைக்கிறார்கள்.சிலர் அமைப்பதில்லை. வடிகட்டிகளை அமைக்காதவர் லயக் கேடுகளோடு சக்திகளை வெளியேற்றுகிறார்கள்.வடிகட்டிகளை அடைத்தோர் சக்திகளின் தன்மையை மாற்றி, லயக்கேடற்ற தன்மையோடு – குணப்படுத்தும் கலையாக வெளியிடுகிறார்கள்.

அனா : அழகுணர்வு குணமாக்குகிறது என்கிறீர்களா? அழகுணர்வு எப்படி…?

அலிஜான்ரோ : அல்ல… அழகுணர்வு மருந்தல்ல; அடைய வேண்டிய இலக்கு.வேறுவிதமாகச் சொல்லவேண்டுமானால், நோய் என்பது அழகுணர்வற்ற தன்மையாகும்.நோயை விடுதல் என்பது அழகுணர்வை அடைதல் ஆகும்.உங்களிடம் அழகுணர்வு இல்லையெனில் நீங்கள் எப்படி குணமாக முடியும்? குணமாகுவது என்பது அழகுணர்வைப் பெறுவதாகும்.எனவே அழகுணர்வே மருந்து எனச் சொல்லமுடியாது.அழகுணர்வு ஆரோக்கியத்தின் கூறுதான்.அழகுணர்வு அல்லாத வேறு ஒரு மருந்தை ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும்.

அனா : கலை எவ்வாறு நமது விழிப்பு நிலையை மேம்படுத்த முடியும்?

அலிஜான்ரோ :இதற்கு விடைளிக்கவென நான் ‘உயிர்விழிப்பு’ (Psychomagic) என்றொரு நூலையும், ‘உள்ளலின் நடனம்’ (The Dance of Reality) என்று மற்றொரு நூலையும் படைத்திருக்கிறேன்.முழுமைகொண்ட தேடுதல் என்பதால் அதையென்னால் விளக்க முடியாது. இந்த இரு நூல்களையும் வாசிக்கலாம்.

அனா : நான் வாசித்திருக்கிறேன்.எனவேதான் அந்தக் கேள்வி.வேறுவகையாகக் கேட்பதானால்,வாழ்வில் அற்புதம் என்பது எது?

அலிஜான்ரோ : உள்ளலை உள்ளது போலவே காணக் கற்றல்.

அனா :‘உள்ளலுக்கும் சிந்தைக்கும்’ உள்ள தொடர்பு பற்றி என்ன சொல்வீர்கள்?

அலிஜான்ரோ : உள்ளலையும் சிந்தையையும் இரு கூறுகளாகக் காண்பது, பிணைந்து கிடப்பவற்றைப் பிரிப்பதாகும்… உள்ளலிருந்து சிந்தையை எப்படிப் பிரிக்கமுடியும்? சிந்தையிலிருந்து எப்படி உள்ளல் வேறாக இருக்கமுடியும்? உள்ளலை நான் உணரும் தருணத்தில் அது சிந்தையாகிறது.உள்ளல் எண்ணமாக, எண்ணுகிறதாக இருக்கிறது.எல்லோருக்குமே இதுதான்.உள்ளலையும் சிந்தையையும் நான் வேறுவேறாகக் காண்பதில்லை.

அனா : சுயம்புவான தரிசனம் உள்ளலை என்ன செய்கிறது?

அலிஜான்ரோ :உண்மை என்னவெனில்,தொடக்கத்தில் நாம் நாமாக இருப்பதில்லை.மற்றவர்கள் எப்படி நாடுகிறார்களோ அப்படி இருக்கிறோம்.நம்மை நாமாக இருக்கச் செய்வதுதான், நாம் நாமாக இருப்பது தான் ஒரே மகிழ்வு.வேறு எதுவும் மகிழ்வல்ல.நிகழ் கணத்தின் பிணைப்பை, உயிர் தொலைப்பதுதான் மிகக் கொடுந்தண்டனை.சுயம்புவானன தரிசனத்தை அடையும் தருணத்தில் நாம் மகிழ்வாக இருக்கிறோம்.

அனா : நீங்கள் உங்களை மகிழ்வாக இருப்பதாக கருதுகிறீர்களா?

அலிஜான்ரோ : முன்பே நான் சொன்னேனே…எனைப் பற்றி நான் ஏதும் கருதுவதில்லை. என்னையே நான் காண்பதில்லை.பிணைந்து கிடப்பவற்றை எனது மனது பிரிப்பதில்லை.எனைப் பற்றி நான் பேசினால் – மகிழ்வோடு இருப்பவராகவும், மகிழ்வோடு இருப்பதைக் காண்பவராகவும் – இரண்டாகப் பிளவுண்டு இருப்பேன்… என்னுள் அப்படி இல்லையே…

அனா : பிணைந்து கிடப்பதைப் பிரிக்கும் பார்வையைக் கடந்து விட்டீர்கள் எனலாமா?

அலிஜான்ரோ : நான் கடந்துவிட்டதாக சொன்னால் அதுவும் அகங்காரமாகிவிடும்.எனவே, கடந்துபோகும் கருதுகோலை ‘நான் ஒப்புக் கொள்வதில்லை’ – ஆனால் – எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு – எனை கூறிட்டு நடக்கும் உரையாடல் இல்லாமல் ஆகியிருக்கிறது எனலாம்.எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு…

அனா : இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

அலிஜான்ரோ : சரியில்லைதான்…

அனா : எனில், இங்கே நிறுத்திக் கொள்ளலாம். இனி உங்கள் பாடு உங்களோடுதான்…

அலிஜான்ரோ : நன்றி.

அனா : மிக்க நன்றி.
•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
ஜேனஸ் ஹேட் (Janus Head) 8(2), 628 -633
©️ 2005 திரிவியம் பப்ளிகேஸன்ஸ், அம்பேர்ஸ்ட், நியுயார்க். (Trivium Publiations, Amberst, NY)
☆♤♡◇♧☆♧◇♡♤☆♤♡◇♧☆♧◇♡♤☆♤♡◇♧

“மறைந்து போகிறது நான்!” (“I Disappear”)
நேர்காணல்:
அலிஜான்றோ ஜோடோர்வஸ்கி (Alejandro Jodorowsky)
பேட்டியாளர்:
அனா இ.இரிபாஸ் (Ana & Iribas)
மொழி பெயர்ப்பு : திருநா

Related Posts