தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர்.
இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இருவருக்கும் பகை.ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு இன்னொருவர் வீட்டில் மரண நிகழ்வு. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் நடந்தாக வேண்டும் என்று இருவரும் பிடிவாதமாக இருக்கின்றனர்.அந்தப் பஞ்சாயத்தில் தலைவர் தம்பி என்ன செய்கிறார்? என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கும் படம் தலைவர் தம்பி தலைமையில்.
கதாநாயகியோடு காதல் காட்சிகளும் பாடல்களும் இல்லை.வில்லன்களோடு அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை.ஆனாலும் கதாநாயகனாக தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் ஜீவா.இருதரப்பையும் திருப்திப் படுத்தியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் அவர் படும்பாடுகள் அவருடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன.
பகை கொண்ட பக்கத்துவீட்டுக்காரர்களாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோரின் தேர்ந்த நடிப்புத்திறன் பாத்திரத்துக்கும் படத்துக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மணமகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன்,நன்றாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி என படத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.திரைக்கதையில் அடுத்தடுத்து இவர்கள் வந்து படத்தை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பப்ளு அஜு,படத்தை வண்ணமயமாகக் கொடுத்திருக்கிறார்.கிடைத்த குறைந்த களத்தை நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பாடல்களில் மகிழ்வூட்டியிருக்கும் இசையமைப்பாளர் விஷ்ணுவிஜய், பின்னணி இசையால் படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
அர்ஜுனபாபு படத்தொகுப்பு படத்தை இயல்பாகவும் வேகமாகவும் ஓடவைக்கிறது.
சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மெல்லிய கதைக்கு வல்லிய திரைக்கதை அமைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் நித்திஷ் சகாதேவ், புறவாழ்க்கையைக் காட்டிலும் மாந்தர்களின் அகவுணர்வுகளை வைத்து முழுநீளப் படம் அதுவும் சுவாரசியமான படம் கொடுக்க முடியும் என்பதை இந்தப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
– இளையவன்











