பாலா சூர்யா படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு – விவரங்கள்
தேசியவிருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்,இப்படத்தின் கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், படத்தொகுப்பை சதீஷும் கவனிக்கிறார்கள்.
சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கும் இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முழுமையடையாமல் சென்னை திரும்பியது படக்குழு.
அப்போதிருந்து, இப்படம் இனிமேல் நடக்குமா? என்கிற சந்தேகத்தைக் கிளப்பிவந்தார்கள். அதன்பின், இந்தப்படம் முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
மே 26,2022 அன்று மதியம் இரண்டு மணியளவில் சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவில்….
மீண்டும் படப்பிடிப்புக்கு வரக் காத்திருக்கிறேன்…!! #சூர்யா41 என்று சொன்னதோடு அவரும் இயக்குநர் பாலாவும் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து பொய்ச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் சூர்யா ஜூலை 18 ஆம் தேதி சென்னை வருகிறாராம்.
அவர் வந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். இப்போது, ஜூலை 20 முதல் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள். சென்னையிலேயே அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.
ஜூலை 20 இல் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவுபெறும் என்கிறார்கள்.
இதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும், சூர்யாவின் திரைப்பயணத்தில் இப்படத்துக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.











