சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு – குழப்பம் நீடிப்பு?
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அவற்றில் ஒன்று, டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம், இன்னொன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படம் என்று சொல்லப்படுகிறது.
இவ்விரண்டு படங்களில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.இப்போது அதிலொரு குழப்பம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் நடிக்க சுமார் அறுபது கோடி கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.மதராசி பட வெளியீட்டுக்குப் பின் சம்பளத்தை உறுதி செய்துகொள்ளலாம் என்று முதலில் பேசியிருக்கிறார்கள்.
அந்தப்படம் ஓடவில்லை என்றதும், சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவியலாது என்று படநிறுவனம் சொல்லிவிட்டதாம்.அதோடு அவர்கள் கொடுப்பதாகச் சொன்ன சம்பளம் சிவ்கார்த்திகேயன் கேட்டதைவிட மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.ஏனெனில் இப்போது இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை மிகவும் குறைந்துவிட்டது.அப்படியே விற்பனை நடந்தாலும் படக்குழு எதிர்பார்க்கும் தொகை கிடைப்பதே இல்லை.
இதனால், சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து படமெடுத்தால் நட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்கிற நிலை கண்கூடாகத் தெரியும்போது அதில் இறங்கிப் பலனில்லை என்று படநிறுவனம் நினைக்கிறதாம்.
இதனால் அந்தப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டார் என்றொரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.
அதேசமயம்,சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் இதுபற்றிச் சொல்லும் தகவல் முற்றிலும் மாறாக இருக்கிறது.அவர்கள் சொன்னதாவது…
இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை,வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குவதாக இருந்தது.இப்போது கொஞ்சம் தள்ளி அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு அதாவது தை பிறந்ததும் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறோம்.இந்தப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கவிருக்கிறது.அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்துவிட்டு இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் இரண்டுநாட்களுக்கு முன்பு தான் திரும்பி வந்தார்கள்.அதனால் இந்தப் படம் நடப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.பராசக்தி படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அதாவது, 2026 சனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
இவற்றில் எது சரியான தகவல் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.











