September 10, 2025
விமர்சனம்

சாயம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சாதியப்பாகுபாடு தலைவிரித்தாடும் அக்கல்லூரி சாதி கடந்து விஜய்விஷ்வாவும் அவரது நண்பர்களும் நட்பாக இருக்கின்றனர். புற உலகின் சூழ்ச்சி அவர்களை எப்படி மாற்றுகிறது? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிற படம்தான் சாயம்.

விஜய்விஷ்வா கல்லூரி மாணவர் பாத்திரத்துக்குத் தேவையான அளவு இருக்கிறார்.கதையில் அவருடைய மாற்றத்துக்கேற்ப நடிப்பிலும் மாற்றம் காட்டியிருக்கிறார்.

நாயகனை நினைத்து உருகும் வேடத்தில் நாயகி ஷைனி நடித்திருக்கிறார். பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் மட்டும் அவரைப் பயன்படுத்தி வழக்கமான நாயகிகள் வரிசையில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் ஆண்டனிசாமி, ஆதிக்கசாதியினரின் தவறான போக்குகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பொன்வண்ணன், இளவரசு, சீதா, போஸ்வெங்கட் உள்ளிட்டோர் தத்தம் வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோரின் ஒளிப்பதிவில் சிறுநகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் ஆகியன அளவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாக உதயன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னனி இசை கதைக்களத்தை மீறாமல் இருக்கிறது.

சாதி ரீதியான பாகுபாடு நாட்டுக்கு நல்லதன்று என்கிற நல்ல கருத்தைச் சொல்ல முனைந்திருக்கும் இயக்குநர்
திரைக்கதை மற்றும் காட்சிகளில் அதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பது பெரும்குறை.

Related Posts