திரைப்படத் தொழிலாளர்களுக்குக் கஞ்சிச்சோறாவது கொடுப்போம் – கமல் ரஜினி விஜய் அஜீத்துக்கு ஆர்.கே.செல்வமணி அழைப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……
தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் என்கிற முறையில் ஒரு பணிவான வேண்டுகோள். தற்போது உலகம் முழுவதையும் பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்த் திரைப்பட உலகம் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சம்மேளனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நடக்கின்ற நிலையில் திரைப்படத் தொழிலாளர்கள் பல்வேறு வேலை நிறுத்தங்களைச் சந்தித்துள்ளார்கள். தயாரிப்பாளர்களை எதிர்த்து ஊதிய உயர்வு கேட்டும், அரசிடம் கோரிக்கைகள் வலியுறுத்தி பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தற்போது நடக்கின்ற வேலை நிறுத்தம் முற்றிலும் வேறானது ஆகும்.
சமூகத்திற்காகவும், தேசத்திற்காகவும் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறுகின்ற இந்த வேலை முடக்கம் தமிழ்த் திரைப்படத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை, தொழில் நுட்பக் கலைஞர்களை மிகவும் பாதித்துள்ளது. தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் தினசரி வேலைக்குச் சென்று தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் பரிதாபமான நிலையில் உள்ள தொழிலாளர்கள் ஆவர்.
இன்று காலையில் லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் எனக்கு போன் செய்து ‘சார் வேலை நிறுத்தம் எப்பொழுது முடியும்’ என்று கேட்டார். 15 இலிருந்து 20 நாட்கள் ஆகலாம் என நான் பதில் அளித்தேன். “சார் நான் வேலைக்குப் போய் செத்தால் கூடப் பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் பசியால் சாவதைவிட நான் கொரோனா வைரஸால் செத்தாலும் பரவாயில்லை” என வேதனையுடன் கூறிய போது ஏற்பட்ட வேதனைகளை என்னால் வார்த்தைகளால் எழுத முடியாது.
இன்று திரைப்படத் துறையில் நல்ல நிலையில் இருக்கின்ற சகோதரர்களுக்கு குறிப்பாக நடிகர், நடிகையர் சகோதர சகோதரிகளுக்கு, இயக்குநர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும், மேலும், திரைப்படத் தொழிலின் மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன்.
நமது சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் இவரைப் போல ஒரு வேளைச் சோற்றிற்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் பதினைந்தாயிரம் பேர் இருப்பார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சிச் சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் எனக் கணக்கு வைத்தால் இரண்டு கோடி ரூபாய் ஆகிறது.
கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து, உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.











