பத்மாவதி காப்பியத்தின் கதை இதுதான்
சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியம்தான் பத்மாவத் படத்தின் மையம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங், அந்நாட்டு இளவரசியான பத்மாவதியைக் காதலித்து, திருமணம் செய்து நாடு திரும்புகிறான். அதே நேரம், தில்லியில் சுல்தான் வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலை செய்துவிட்டு, தானே சுல்தானாகிறான் அலாவுதீன் கில்ஜி. அப்போது ரத்தன் சிங்கால் ஒரு தவறுக்காக நாடு கடத்தப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் எண்ணத்தில் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.
இதனால், மேவாட் மீது படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜி, ரத்தன் சிங்கைச் சிறைப்படித்துச் செல்கிறான். தில்லி சென்று சூழ்ச்சியால் அவனை மீட்டுவருகிறாள் பத்மாவதி.
ரத்தன் சிங் மேவாடில் இல்லாத நேரத்தில் பத்மாவதியை மணக்க விரும்புகிறான் கும்பனேரின் அரசனான தேவ்பால். தில்லியிலிருந்து திரும்பும் போது இதனைக் கேள்விப்படும் ரத்தன் சிங், தேவ்பாலுடன் துவந்த யுத்தத்தில் ஈடுபடுகிறான். இதில் இருவருமே மடிகிறார்கள். ரத்தன் சிங்கின் சதியில் விழுந்து உயிரிழக்கிறாள் பத்மாவதி. இதற்கிடையில் பத்மாவதியை அடையும் நோக்கத்தோடு மீண்டும் மேவாடின் மீது படையெடுக்கிறான் அலாவுதீன்.
அவனுடன் ரஜபுத்திரப் படைகள் போரிட்டுக்கொண்டிருக்கும் போது, கூட்டம் கூட்டமாக தீயில் இறங்கி மடிகிறார்கள் ராஜபுத்திரப் பெண்கள். போரில் வென்றாலும் அலாவுதீன் நினைத்தது நடக்காமல் போகிறது என்பதுதான் பத்மாவதி காவியத்தின் கதை.
இதில் சிற்சில மாற்றங்களைச் செய்து ‘பத்மாவத்’ படத்தை எடுத்திருக்கிறார் சஞ்சய்லீலா பன்சாலி.











