October 30, 2025
சினிமா செய்திகள்

பொன்னியின்செல்வன் வெற்றி – மணிரத்னம் புதுமுடிவு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. உலகெங்கும் வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா தவிர உலகெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.

முதல் பாகத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம்பாகத்தில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.

முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த கார்த்தி அதாவது வந்தியத்தேவன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இப்போது படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம்.

வந்தியத்தேவனின் பயணத்தில் சிங்கம் புலி கரடி உள்ளிட்ட சில விலங்குகளை எதிர்கொள்ளும்விதமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன என்கிறார்கள்.சுமார் பத்துநாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள்.

அதோடு இரண்டாம்பாகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதில் சிற்சில மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்.

அதுதொடர்பான வேலைகளைத் தொடங்கச் சொல்லி தன்னுடைய குழுவினருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் மணிரத்னம்.

இப்போது கார்த்தி மீண்டும் முடியை நீளமாக வளர்த்தாக வேண்டும்.

Related Posts