January 17, 2026
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுன் படம் உறுதியானது – வியக்க வைக்கும் சம்பளம்

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அதற்காக அலுவலகம் அமைத்து திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.அதிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார்.

அதனால், அடுத்து கைதி 2 படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அதற்கான வேலைகளும் தொடங்கவில்லை.இந்நிலையில் ஆந்திரா சென்று தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுனை சந்தித்துப் பேசினார்.

அதனால் அவரை கதாநாயகனாக வைத்துத்தான் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன.

அந்தச் செய்தி உறுதியாகியிருக்கிறது.

ஆம்,அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்.அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாம்.

அல்லுஅர்ஜுன் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

அது நிறைவடைந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கமல்,ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்திலிருந்து அவர் வெளியேறியது மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அவர் இயக்க ஒப்பந்தமானது ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரே காரணம்தான் முக்கியமாக இருந்திருக்கிறது.

அது லோகேஷ் கனகராஜ் சம்பளம்.

அவர் அடுத்த படத்தை இயக்குவதற்குக் கேட்ட சம்பளம் சுமார் எழுபத்தைந்து கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்.அவ்வளவு சம்பளம் எல்லாம் கொடுக்க இயலாது நீங்கள் எங்களுக்கு படம் இயக்கவேண்டாம் என்று ராஜ்கமல் நிறுவனம் உறுதியாக நிராகரித்துவிட்டது எனச் சொல்லப்படுகிறது.

அதேநேரம்,அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து அந்த சம்பளத்தைத் தரத் தயார் என்று பச்சை விளக்கு எரிந்திருக்கிறது.அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கே சென்றிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தை பிறந்தவுடன் அல்லுஅர்ஜுன் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணையவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென்றும் இவ்வாண்டு மத்தியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென்றும் சொல்லப்படுகிறது.

அதற்குள் அட்லி இயக்கும் படம் நிறைவடைந்துவிடும் என்றும் அப்படி இல்லாவிட்டாலும் இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று அல்லு அர்ஜுன் சொல்லிவிட்டாராம்.

லோகேஷ் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts