September 10, 2025
செய்திக் குறிப்புகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பெரிய ஸ்டாராக வருவார் – இசையாளர் நம்பிக்கை

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன்,பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார்,குமரவேல்,பாலசரவணன், வினோத் சாகர்,லிவிங்ஸ்டன்,சிவா அரவிந்த்,வினோத் முன்னா, தாரிணி,கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

வரும் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல்,சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி,கவிதா,நாயகன் குமரன் தங்கராஜன்,நாயகி பாயல் ராதாகிருஷ்ணா,இயக்குநர் பாலாஜி வேணுகோபால்,தயாரிப்பாளர் கே.ஜி.கணேஷ், தயாரிப்புநிர்வாகிகள் சீனிவாசன்,ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தொகுப்பாளர் மதன் பேசுகையில்…

இயக்குநர் பாலாஜி வேணுகோபாலுடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவதுபடம் இது. அவருடைய முதல்படமான ‘லக்கி மேன்’ படத்திலும் பணியாற்றிருந்தேன்.அதன்பிறகு என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.சுவராசியமாக இருந்தது.அவரிடம் இதனை எப்படி திரையில் சொல்ல போகிறீர்கள் எனக்கேட்டேன்.அதற்காகத்தான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்றார்.அதற்கு ஏற்ற வகையில் இப்படத்தின் கதையை நேரடியாக விவரிக்காமல், நான்-லீனியர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இயக்குநர் பாலாஜி தனக்கு என்ன தேவை என்பதில் மிகத்தெளிவாக இருப்பார்.அவரை ஒரு விஷயத்தில் சமரசம் செய்வது கடினம்,அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக ஒலிஅமைப்பு தொடர்பான விசயத்தில் அவர் வானொலியில் பணியாற்றிய அனுபவம் காரணமாக துல்லியமாக இருந்தார்.
இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளன. நீங்கள் செலவிடும் நேரத்திற்கு தகுதியான பொழுதுபோக்கை வழங்கி இருக்கிறோம். திரையரங்குகளில் படத்தைப் பார்த்து மகிழலாம்.
இந்தப்படத்தில் குமரனின் நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக சொல்கிறேன். இயக்குநர் பாலாஜி வேணுகோபாலின் டயலாக்குகள் அனைத்து தரப்பினரும் இரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.
செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் சிவா அரவிந்த் பேசுகையில்…..

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு இந்தப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார்.இதற்காக முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குமரன் சின்னத்திரை தொடர்களில் நடிப்பதை பார்த்திருக்கிறேன்.ஆனால் பெரியதிரையில் நடிக்கும் போது அவரிடம் இருந்து நுட்பமான நடிப்புத்திறன் வெளிப்படும்போது அவரை வியந்து பார்த்திருக்கிறேன். இவரிடம் இந்தத் திறமைகள் எல்லாம் இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.நாயகனுக்கு பாடல்கள் மிக முக்கியம். இந்தப்படத்தில் இடம்பிடித்திருக்கும் இரண்டு பாடல்களிலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு நிச்சயமாக பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவரிடம் ஒரு நடிகருக்கான அனைத்து விஷயங்களை விட அவருக்குள் ஒரு இயக்குநருக்கான அறிவும் இருக்கிறது.
இயக்குநர் பாலாஜியிடம் மறைந்த கிரேசி மோகனின் ‘ டச் ‘இருக்கிறது. இதனை பல தருணங்களில் அவருடைய உரையாடல்கள் மூலம் தெரிந்துகொண்டேன். இந்தப்படம் பார்த்தபிறகு நீங்களும் அதை உணர்வீர்கள். இந்தத்திரைப்படத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

‘சரிகம’ ஆனந்த் பேசுகையில்…..

வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளரான கணேஷிற்கு வாழ்த்துகள்.அவருடைய தயாரிப்பில் வெளியான ‘யாத்திசை’ திரைப்படத்தின் இசையை சரிகமவில்தான் வெளியிட்டோம். அதைத்தொடர்ந்து தற்போது ‘குமார சம்பவம்’ படத்திற்கும் சரிகம உடன் கைகோர்த்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் திரைப்படத்தின் பாடல்களும் பெரியஅளவில் வெற்றி பெறும்.
நீண்டகால நண்பரான இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான ‘குமார சம்பவம்’ படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத்திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி எண்டர்டெய்னர்.ஃபேமிலி ஓரியண்டட் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்தவரிசையில் வெளியாகும் இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இசையமைப்பாளர் அச்சுராஜாமணியின் இசையில் தமிழிலும்,தெலுங்கிலும் ஏராளமான பாடல்கள் வெற்றி பெற்று இருக்கின்றன.இந்தப்படத்திற்கும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்.அவருக்கும் என் வாழ்த்துகள்என்றார்.

நடிகர் குமரவேல் பேசுகையில்….

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவதுபடம்.இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது இந்தப்படத்தை யார் தயாரிக்கிறார்கள் என அவரிடம் கேட்டேன் அவர் ‘யாத்திசை’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் என்று சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்.ஏனெனில் அந்தத்திரைப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி அனைத்துதரப்பினரிடமும் கொண்டு சேர்த்து படத்தை பெரியஅளவில் வெற்றிபெறச் செய்தவர்கள் அவர்கள்.
இயக்குநர் பாலாஜி என்னிடம் என்ன சொன்னாரோ, அதை அப்படியே மாற்றாமல் எடுத்திருக்கிறார்.கதை என்ன என்று சொல்லவேண்டும் என்றால் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்கும்,அந்தவீட்டின் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சனை.இதுதான் கதையின் மையப்புள்ளி.எனக்கான காட்சிகள் அனைத்தும் ஒரேவீட்டில் அமைந்திருந்தாலும்,அதனை காட்சி மொழியாக துல்லியமாக விவரித்து இருந்தனர்.
குமரன் நாயகனாக அறிமுகமானாலும் அவருடைய அனைத்து நடிப்புத்திறன்களையும் வெளிப்படுத்தினார். அதற்கேற்ற வகையில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். படப்பிடிப்புத்தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்.
எளிமையான கதை.அதனை பொழுதுபோக்காகவும், வித்தியாசமான கோணத்திலும் சொல்லி இருக்கிறார்கள். இது அனைத்து இரசிகர்களையும் கவரும் என்றார்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசுகையில்,

இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும்,இயக்குநருக்கும் நன்றி.நான் நடிகர் குமரவேலின் இரசிகன்.இந்தப்படத்தில் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் நாயகனான குமரன் ஒரு இன்ட்ரோவர்ட் பெர்சன்.அதிகம் பேசமாட்டார்.ஆனால் அற்புதமான திறமைசாலி.இந்தப்படத்திற்குப் பிறகு குமரன் நிச்சயமாக ஸ்டாராக உயர்வார்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் 15 ஆண்டு கால நண்பர்கள்.’மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்திற்கு நான் இசையமைக்கும்போது அந்தப்படத்தில் அவர் முக்கியவேடத்தில் நடித்திருந்தார். அப்போதிலிருந்து நான் இப்போதுவரை இசையமைப்பாளராகவே பணியாற்றி வருகிறேன். ஆனால் பாலாஜி வேணுகோபால் நடிகராக உயர்ந்து,அதன் பிறகு இயக்குநராகி,பாடலாசிரியராகவும் உயர்ந்திருக்கிறார். என் நண்பனின் படத்திற்கு நான் இசை அமைத்திருக்கிறேன் என்ற பெருமிதமே எனக்கு போதும்.
உணவகத்தில் காப்பி சாப்பிட்டுக் கொண்டே இந்த படத்தைப்பற்றிப் பேசத்தொடங்கினோம்.தற்போது முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம். விரைவில் படத்தின் வெற்றி விழாவிலும் சந்திப்போம்.
இந்தப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்தான் எழுதி இருக்கிறார்.ஒவ்வொரு பாடலை எழுதும் போதும் மூத்த பாடலாசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்பதுபோல் தான் எழுதி இருக்கிறார்.இதற்கு அவருக்குள் ஒரு ‘குரு’த்துவம் இருக்கவேண்டும்.அது அவரிடம் இருக்கிறது.இந்தப்படத்திற்காக பத்துநாட்களில் பாடல்களை உருவாக்கினோம்.பத்துநாட்களில் படத்திற்கான பின்னணி இசையை அமைத்தோம். அந்த அளவிற்கு இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார்.
இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவுதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை பாயல் ராதாகிருஷ்ணா பேசுகையில்….

இந்தப்படத்தில் பணியாற்றத் தொடங்கும்போது எனக்கு தமிழ்மொழி தெரியாது.ஆனால் இப்போது என்னால் தமிழில் பேசமுடியும். இதற்கு முழு ஆதரவளித்த படக் குழுவினருக்கு நன்றி.
வழக்கமான காதல்கதையில் இடம்பெறும் நாயகி போல் அல்லாமல் அழுத்தமான வேடத்தை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார்.இது நான் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம்.என்னுடைய அறிமுகம் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்திற்காக என்னால் பின்னணி பேச முடியவில்லை.ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக தமிழில் பின்னணி பேசுவேன் என்று நம்புகிறேன்.
குமரன் மற்ற தருணங்களில்தான் இன்ட்ரோவர்ட் பெர்சன்.ஆனால் படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போது நேர்த்தியான கலைஞர்.அவருடன் இணைந்து பணியாற்றும்போது சௌகரியமாக இருப்பதை உணர்ந்தேன்.
படப்பிடிப்புத்தளத்தில் இயக்குநர் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார்.அவருக்கு ஒரு ஷாட்டில் என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார். இது என்னை ஆச்சரியப்படுத்தியது.அவரிடமிருந்து சில விசயங்களை கற்றுக்கொண்டேன் என்றார்.

நாயகன் குமரன் தங்கராஜன் பேசுகையில்…..

இந்தமேடையில் வீற்றிருந்து பார்க்கும்போது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.இந்தப்படத்தில் ‘சினிமா என் இலட்சியம்’ என்றொரு டயலாக் வரும்.உண்மையில் எனக்கு அது மிகப்பெரிய இலட்சியம்.கிட்டத்தட்ட 17 ஆண்டுகால இலட்சியம்.சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன்.அந்தக்கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.
என்னுடைய குடும்பத்தினருக்கு திரைஉலக பின்னணி கிடையாது.அப்பா டீ கடையில் வேலைபார்த்தவர்.அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்தஆசை இருந்தது.எனக்கும் அந்த ஆசை இருந்தது.அவருடைய கனவை நான் நனவாக்கவேண்டும் என்று முயற்சி செய்தேன்.எங்கெங்கோ தேடிஅலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன்.அதன்பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது.தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன்.இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம்.இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது.இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள்.இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தபடம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகைதந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படைப்பை வழங்கி இருக்கிறோம். நீங்களும் இதனைப்பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில்…..

இயக்குநராக அங்கீகாரம் பெற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.என்னுடைய இயக்கத்தில் உருவான முதல்படம் ‘லக்கி மேன்’. 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல்தேதி அன்று வெளியானது.இரண்டுஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘குமார சம்பவம் ‘ என்ற படத்தின் மூலம் இரசிகர்களை சந்திக்கிறேன்.
என்றைக்காவது நான் சோர்வடைந்திருக்கும் தருணத்தில் இணையத்தில் வெளியான ‘பானி பூரி’ மற்றும் திரையரங்குகளில் வெளியான ‘லக்கி மேன்’ படத்திற்காக ஊடகங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஒருமுறை பார்வையிடுவேன்.அது எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும்,உத்வேகத்தையும் அளிக்கும்.இதற்காக இந்தத்தருணத்திலும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
குமார சம்பவம் படத்தைப் பற்றி நிறைய கேள்விகள் இருக்கிறது.குமரனுடைய வாழ்க்கை நடைபெற்ற சம்பவங்கள்தான் இந்த குமார சம்பவம்.இது படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியும்.
முதலில் தயாரிப்பாளர் கணேசுக்கு நன்றி.குமரன் மூலமாகத்தான் தயாரிப்பாளர் கணேஷ் அறிமுகமானார். கதையைக் கேட்டபிறகு,உடனடியாக முடிவெடுத்து படத்தின் பணிகளை தொடங்கினார்.இந்தத்தருணத்தில் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியாளர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.கணேஷ் சார் இடதுகை பழக்கம் உள்ளவர். இந்த இடதுகை பழக்கம் உள்ளவர் முடிவுகளை வேகமாக எடுப்பவர்கள்.அதேபோல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள்.அதனால்தான் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கணேஷ் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்ற ஊதியத்தை பேரம் பேசாமல் சரியான தருணத்தில் வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.இதன் காரணமாகவே இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியுடன் பணியாற்றிய அனுபவம் அலாதியானது.’விடியாத இரவு ஒன்று..’ பாடலை உருவாக்கியதற்கும் ஒரு பின்னணி உண்டு. என்னுடைய தாத்தா பாட்டி காலத்தில் ‘மயக்கமா.. கலக்கமா..’ என்ற பாடல் பிரபலமானது.என்னுடைய தந்தை – தாய் காலகட்டத்தில் யாராவது சோர்வாக இருந்தால் ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலை கேட்பார்கள்.இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்கள் எப்போதாவது சோர்வை உணர்ந்தால் அந்தநேரத்தில் கேட்கவேண்டும் என்பதற்காகவே ‘விடியாத இரவு ஒன்று..’ என்ற பாடலை உருவாக்கினோம்.இந்தப் பாடலைக் கேட்டு அவர்கள் உத்வேகம் பெறவேண்டும் என்பதற்காகவும் இதை உருவாக்கினோம்.மேலும் இந்தப் பாடலை என்னுடைய ஞானத்தகப்பன் – ஞானகுரு கண்ணதாசனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதியவை.
இந்தப்படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் பாரதியார்,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,
நா.முத்துக்குமார்,அசல் கோளாறு,பால் டப்பா ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதினேன்.இந்தப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு நானே வழங்கிக் கொண்டேன். என்னுடைய கதைக்கான பாடல்களை நான் எழுதமுடியும் என்று உறுதியாக நம்பினேன்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் மட்டுமல்ல அனைத்து எழுத்து வடிவங்களையும் நான் மட்டுமே உருவாக்கினேன். இது பேராசைதான். ஆனால் இதன் பின்னணியில் இரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய குழந்தை குட்டிகளுடன் திரையரங்கத்திற்கு வரலாம்.குடும்பத்துடன் பொழுதுபோக்குஅம்சம் உள்ள படமாக குமார சம்பவம் உருவாகி இருக்கிறது.
கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான பல வெற்றி படங்களுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டனும், ஜி.எம். குமாரும் அவரிடம் உதவியாளர்களாக இருக்கும்போது தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த தமிழ்பப்டத்திலும் நடிக்கவில்லை.அதனை இந்தப்படத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறேன்.இதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.
இது ஒரு போராளி பற்றிய கதை.ஆனால் அவனது போராட்டத்தைப் பற்றிய கதை அல்ல.இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை.ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல.
குமரன் மிகப்பெரிய திறமைசாலி,அவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.குமரன் திரையுலகில் நன்றாக வளரவேண்டும் என்று எண்ணம் கொண்ட பலர் அவரை சூழ்ந்து இருக்கிறார்கள்.இதன்காரணமாகவே அவர் திரையுலகில் சிறப்பான இடத்திற்கு உயர்வார்.நான் குமரனின் நடனத்திற்கு இரசிகன்.ஆனால் இந்தத் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை.இதை அறிந்ததும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு கதைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் குமரன்.அவருடைய இந்தமுயற்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்தத்திரைப்படத்திற்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறது என்பதனை நான் உணர்ந்தேன்.நான் லக்கி மேன் படத்திற்காக முதலில் வைத்த பெயர் கந்தன் கருணை.ஆனால் அந்த டைட்டில் எனக்கு கிடைக்கவில்லை.நான் அடிப்படையில் ஒரு முருக பக்தன்.ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று முருகரை வணங்கிக் கொண்டிருந்தபோது உமது பெயரை என்னுடைய திரைப்படத்திற்கு வைக்கமுடியவில்லை என வருந்தினேன்.அதன்பிறகு முருகன் எனக்கு எப்படி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்றால்.. நாயகன் பெயர் குமரன், படத்திற்கு டைட்டில் குமாரசம்பவம்,குமரவேல்,ஜி எம் குமார்,பால சரவணன்,நிகில் முருகன் என முருகரின் பெயரைக் கொண்டவர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.நான் இதற்குமேல் முருகரிடம் கேட்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது.இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மேலும் இந்தத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,கலை இயக்குநர்,படத்தொகுப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகள்,நடிகர்கள்,நடிகைகள்,ஏனைய தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில்……

எங்கள் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் நேரடியான இரண்டாவதுபடம் தான் ‘குமார சம்பவம்’. முதல்படைப்பு ‘யாத்திசை’.யாத்திசை திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுமுதற்காரணம் ஊடகங்கள் தான். இதற்காக மீண்டும் ஒருமுறை ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘யாத்திசை ‘படத்தைப்போலவே இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.ஏனெனில் குமார சம்பவம் தரமான ஃபேமிலி என்டர்டெய்னர்.இயக்குநர் பாலாஜி வேணுகோபால் அழகாக இயக்கியிருக்கிறார்.இந்தப்படத்தை குடும்பத்தினர் அனைவரும் கண்டு இரசிக்கலாம்.
நாயகன் குமரன் எங்களுடைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார்.அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை உங்களை வைத்து நிச்சயமாக திரைப்படத்தை தயாரிப்பேன் என வாக்குறுதி அளித்தேன்.அந்த வாக்குறுதியை ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் நிறைவேற்றிவிட்டேன்.
இந்தத்திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

***

Related Posts