கொலைகாரன் – திரைப்பட விமர்சனம்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போட்டிதான் சுவாரசியமாக இருக்கும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் நடக்கும் போட்டியையும் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதுதான் கொலைகாரன்.
ஒரு கொலைவழக்கை விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி அர்ஜூன். அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி சரணடைவதில் தொடங்கும் படம் மெதுவாக நகரத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது. இரண்டாம் பாதியில் இருக்கிற வேகம் முதல்பாதியிலும் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவசியமில்லாத வேடத்தைத் தேர்ந்தெடுப்பதிலேயே விஜய் ஆண்டனி வெற்றி பெறுகிறார். வசனங்களை மெதுவாகப் பேசலாம் இவர் மிக மெதுவாகப் பேசுகிறார். அதனால் படமே மெதுவாகிறது.
பல்லாண்டுகள் நடித்துத் தேர்ந்த அர்ஜூனோடு மோதும் காட்சிகளில் அவரையே மிஞ்சுகிறார் விஜய் ஆண்டனி.
காவல்துறை அதிகாரி வேடத்தில் அர்ஜூன். அவருக்கு இதெல்லாம் சாதாரணம். போகிற போக்கில் நடித்துவிட்டுப் போகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷிமா நர்வல் பொருத்தமாக இருக்கிறார். படம் முழுதும் பயந்து கொண்டே இருக்கும் அவரின் அழகு பாடல் காட்சிகளில் வெளிப்படுகிறது.
நாசர், சீதா,சம்பத்ராம் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயமாக நடித்திருக்கிறார்கள்.
முகேஷின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைக்கிறது.
சைமன் கே.கிங் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசை சில இடங்களில் அதிகம். பல இடங்களில் பலம்.
இயக்குநர் ஆண்ட்ரூலூயிஸ் கவனிக்கத் தகுந்த இயக்குநராகியிருக்கிறார். மிகச் சிக்கலான இடங்களையும் இலகுவாகக் கடக்கிறார்.
கதை தொடங்கிவிட்டால் பாடல் வைக்கமுடியாது என்று தெரிந்தவுடன் தொடங்கும் முன்பே பாடல் வைத்திருப்பது புதிய யோசனை.
இடைவேளையில் ஒரு ஆச்சரியம், கடைசியில் திடீர் திருப்பம் ஆகிய அம்சங்கள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.