October 30, 2025
சினிமா செய்திகள்

கருப்பர் நகரம் சர்ச்சை – கோபிநயினார் வெளியேற்றப்பட்டார்

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார்.2017 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை.

இந்நிலையில்,அறம் படத்துக்கு முன்பாகத் தொடங்கிய கருப்பர்நகரம் படத்தை மீண்டும் வெளியில் எடுத்தார் கோபி நயினார்.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப் படம் புத்தம்புதிய படம் போல் சித்தரிக்கப்பட்டு,இயக்குநர் வெங்கட்பிரபு,நடிகர் ஆர்யா ஆகியோரைக் கொண்டு முதல்பார்வை மற்றும் டீசர் ஆகியன வெளியிடப்பட்டன.

இது நடந்தது நவம்பர் 9,2023. ஒருமாதம் முடிவடைவதற்கு முன்பே அந்தப்படத்திலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் இயக்குநர் கோபிநயினார்.

அவருடைய நடவடிக்கைகளால் அறம் படத்துக்குப் பின் பல முயற்சிகள் எடுத்தும் அவை வெற்றி பெறாமல் போனது.அதன்பின் வெற்றிமாறன் மூலம் ஒரு படம் கிடைத்தது. அதையும் அவர் சரியாகச் செய்து வெளிக்கொண்டுவரவில்லை.

அதனால், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த கருப்பர்நகரம் படத்தைக் கையிலெடுத்து அதைச் சற்று மெருகேற்றி வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நாயகனாக நடித்திருக்கும் ஜெய் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

அதற்கான வேலைகள் தொடங்கிய சில நாட்களிலேயே ஜெய் உள்ளிட்ட படக்குழுவினரோடு கோபிநயினார் முரண்பட்டுக் கொண்டாராம்.

இதனால் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோபிநயினாரைப் படத்திலிருந்து வெளியேற்றிவிட்டு படத்தை முழுமையாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இந்தப்படத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இனிமேல் இந்தப்பட விசயங்களில் தலையிடமாட்டேன், எக்காலத்திலும் இப்படத்துக்கு உரிமைகோரமாட்டேன் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டாராம் கோபிநயினார். திரையுலக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இப்போது நாயகன் ஜெய் மற்றும் இசையமைப்பாளர் கே.எஸ்.பிரசாத் ஆகியோர் பொறுப்பெடுத்து படத்தை முடிக்கும் வேலைகள் செய்கிறார்களாம்.

அதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே கருப்பர்நகரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

இப்படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் கதையை ஒத்திருக்கும் படம் என்று சொல்லப்பட்டது. என் கதையை ப.இரஞ்சித் காப்பியடித்துவிட்டார் என்று கோபிநயினார் குற்கம் சாட்டியிருந்தார்.

இப்போது இந்தப்படமும் அப்படியே தயாராகிறதாம். மக்கள் ஏற்கெனவே மெட்ராஸ் படத்தைப் பார்த்துவிட்டார்கள். மீண்டும் அதேபோன்றதொரு படத்தைக் கொடுத்தால் போலச்செய்தலாகிவிடும் என்கிற ஆபத்து இருக்கிறது.

Related Posts